தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா!
உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, எம்பவர் இந்தியா நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம் மற்றும் ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரி ஆகியவற்றின் சார்பில் தூத்துக்குடியில் நடைபெற்றது.
நிகழ்ச்சியை தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் குருச்சந்திரன் துவக்கி வைத்து சிறப்புரையாற்றி உலக உரிமைகள் தின விழிப்புணர்வு பதாகையை வெளியிட்டார். முதல் பிரதியை எம்பவர் இந்தியா செயல் இயக்குநர் ஆ.சங்கர் பெற்றுக் கொண்டார். பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் குருச்சந்திரன் பேசும் போது கூறியதாவது :

மாணவ சமுதாயம் நுகர்வோர் விழிப்புணர்வு பெற்றால் சமுதாயத்தில் மாற்றம் ஏற்படும். பொருள்கள் மற்றும் சேவைகளில் ஏற்படும் குறைபாடுகளுக்கு நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் வழியாக நிவாரணம் பெறலாம். நுகர்வோர் அனைவரும் விழிப்புடன் இருந்து சேவைகளைப் பெற வேண்டும். மேலும் பொதுமக்களுக்கு நுகர்வோர் விழிப்புணர்வை ஏற்படுத்த மாணவர்கள் அனைவரும் முன்வர வேண்டும் என்றும் கூறினார்.
விழாவில் எம்பவர் இந்தியா செயல் இயக்குநர் சங்கர் பேசும் போது கூறியதாவது :
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019 சிறப்பம்சங்கள் குறித்தும், நுகர்வோருக்கு பில்லே ஆயதம் என்பதால் நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் பில்லை கேட்டுப் பெற வேண்டும். நாம் பெற்ற சேவைகளிலோ அல்லது பொருட்களின் தரத்திலோ ஏதேனும் குறைகள் ஏற்பட்டால் நுகர்வோர் குறைதீர் ஆணையங்களை நாட வேண்டும் நுகர்வோரின் நலனை பாதுகாக்க மாவட்ட அளவிலும், மாநில அளவிலும், தேசிய அளவிலும் நுகர்வோர் குறைதீர் ஆணையங்கள் செயல்படுகின்றன என்றும், மாணவர்கள் பொருட்களை வாங்கும் போது அதன் தரம், விலை, தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி ஆகியவற்றை பார்த்து வாங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதோடு பொருட்களையோ, சேவைகளையோ பெறும் போது அவசியம் ரசீது கேட்டுப் பெற வேண்டுமென சங்கர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அலுவலர் சுதா வரவேற்புரையாற்றினார். உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மருத்துவர் அருண், மாவட்ட பதிவாளர் சுப்புராஜ், துணைப் பதிவாளர் அந்தோணி பட்டுராஜ், ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர். பழனி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். தூத்துக்குடி தனி வட்டாட்சியர் ஞானராஜ் நன்றியுரை கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உணவுப் பொருள் வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் சுமதி, எம்பவர் இந்தியா மேலாளர் லலிதாம்பிகை, தீபக் ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரி ஆசிரியர்கள் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்ச்சியில் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.












