அரசுப் பள்ளிகளில் 2026 – 2027 ம் கல்வியாண்டில் 5 லட்சம் மாணவர்களை சேர்க்க இலக்கு:
20 நாட்களில் இதுவரை 44,396 மாணவர்கள் சேர்ப்பு
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில், 4.3 லட்சம் மாணவர்கள் கடந்த ஆண்டு புதிதாக சேர்ந்தனர். இந்தாண்டு, 5 லட்சம் மாணவர்களை சேர்க்க தொடக்கக்கல்வித் துறையின் சார்பில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதை நிறைவேற்றும் வகையில், வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் துவங்கும் மாணவர்கள் சேர்க்கை, தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசுப் பள்ளிகளில் மார்ச் 2ம் தேதியே துவங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, 5 வயது பூர்த்தியடைந்த குழந்தைகள் பற்றிய விபரங்களை, அங்கன்வாடிகளில் சேகரித்த ஆசிரியர்கள், அவர்களை வரும் கல்வியாண்டிற்காக முதல் வகுப்பில் சேர்த்துள்ளனர்.
இதன்படி, அரசு தொடக்கப் பள்ளிகளில் கடந்த 20 நாட்களில், 44,396 மாணவர்கள் புதிதாகச் சேர்ந்துள்ளனர்.












