மாணவர்களுக்கான சிறப்புப் பேருந்து திட்டம் :
மாணவர்கள் மகிழ்ச்சி :
தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த பெற்றோர்கள் கோரிக்கை

மாணவர்களுக்கான சிறப்பு பேருந்து திட்டம் மிகுந்த பயனளிப்பதனால் இத்திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்த பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடந்த 12 ம் தேதி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்த சிறப்பு பேருந்து திட்டத்தை விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்த பதிவில் அவர் கூறியதாவது,
சட்டமன்ற உறுப்பினராக, 1989-இல் எனது முதல் உரையே மாணவர்களுக்கு இலவச ‘பஸ் பாஸ்’ வழங்க வேண்டும் என்பதுதான். அதனை ஏற்றுக்கொண்டு, முதல்வர் கலைஞர் செயல்படுத்திய அத்திட்டம் நாட்டுக்கே வழிகாட்டியது. அதன் தொடர்ச்சியாக, தற்போது மாணவர் மட்டும் சிறப்புப் பேருந்துகளை நமது ஆட்சியில் இயக்கி வருகிறோம்.
அமைச்சர் சிவசங்கர் மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகளும் இத்திட்டத்தின் செயல்பாட்டைத் தொடர்ந்து விழிப்போடு கண்காணித்து, மேலும் சிறப்பாகச் செயல்படுத்திட வேண்டும் என வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் சிவசங்கர் கடந்த 12 ம் தேதி தொடங்கி வைத்த “மாணவர் மட்டும்” திட்டத்தின் மூலம், 25 அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவர்கள் காலை, மாலை இருநேரங்களிலும் சிறப்புப் பேருந்துகளின் மூலம் பாதுகாப்பான பயணத்தை பெற்றுள்ளனர்.
பொதுப் பேருந்துகளில் நெரிசலில் சிக்கி மாணவர்கள் தவிப்பதைத் தவிர்க்கவும், அவர்களின் நலனுக்காகவுமே இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம், நாள்தோறும் 2,500 முதல் 3,000 மாணவர்கள்வரையில் பயன்பெறுவதாகக் கூறப்படுகிறது.
சென்னை எம்டிசி பள்ளி பேருந்து சேவை
மூத்த அதிகாரிகூறுகையில்,
நந்தம்பாக்கத்தில் உள்ள ஆர்மி பப்ளிக் பள்ளி, சாந்தோமில் உள்ள செயின்ட் ஜோசப் பிரைமரி பள்ளி, வீரபுரத்தில் உள்ள அரசு பள்ளி மற்றும் தொண்டியார்பேட்டையில் உள்ள சௌந்தரபாண்டி சுப்பரமணி மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட 25 பள்ளிகளுக்கு இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த மாணவர்களுக்கான சிறப்பு பேருந்து சேவைகளுக்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
அரசுக்கு கோரிக்கை மற்றும் நன்றிகள் 🙏
பள்ளி மாணவர்களுக்கான இந்த பேருந்து சேவையினால் காலையில் வேலைக்கு செல்லும் பெற்றோர்களின் அலைச்சல் மற்றும் நேரம் மிச்சமாகிறது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து செல்வதனால் பள்ளியின் நேரத்திற்கு தாமதிக்காமல் செல்ல வேண்டும், அதே நேரத்தில் பெற்றோர்கள் தங்களது பணிபுரியும் இடத்திற்கும் தாமதிக்காமல் செல்ல வேண்டிய கட்டாயத்தினால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகிறார்கள்.
இந்த பேருந்து வசதியினால் பெற்றோர்கள் அலைச்சல், நேரம் மிச்சம் மற்றும் மன உலைச்சலில் இருந்து விடுபடுகிறார்கள். மேலும் பணமும் மிச்சமாகிறது. இது ஒரு 2 அல்லது 3 குழந்தைகள் இருக்கும் நடுத்தர குடும்பத்திற்கு வரப்பிரசாதமாகும்.இதனால் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியை பெற்றோர்கள் தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும் இத்திட்டத்தினை சென்னை முழுவதும் கொண்டு வரவேண்டும் என்றும் இதனால் சென்னையில் காலை மற்றும் மாலை பள்ளி விடும் உச்ச நேரத்தில் ( peak Hours ) சிறிது வாகன நெருக்கடி குறைய வாய்ப்புள்ளது.வருங்காலங்களில் தமிழகம் முழுவதும் இத்திட்டத்தினை விரிவுபடுத்த வேண்டும் என்றும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.












