காயல்பட்டணம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்
காயல்பட்டணம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் தமிழ்த்துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறை (Madurwi Kamarajar University) மற்றும் மலேசியா சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை (Sultan Idris Educational University – Perak Darul Ridzuan) ஆகியன இணைந்து, அற இலக்கியங்களில் பண்பாட்டுப் பதிவுகள் எனும் தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கை செப்டம்பர் 3ம் தேதி நடத்தியது.
கருத்தரங்கிற்கு கல்லூரி நிறுவனர் வாவு. செய்யிது அப்துர் ரஹ்மான், துணைச்செயலர் வாவு அஹமது இஸ்ஹாக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்த்துறை பேராசிரியை முனைவர் ச.சத்தியபாமா வரவேற்புரை வழங்கினார்.
கல்லூரி செயலர் ஹாஜி. வாவு மொகுதஸீம் வாழ்த்துரை வழங்க முதல்வர் முனைவர்.பாக்கிய சீமா தொடக்க உரை ஆற்றினார். நிர்வாக அதிகாரி முனைவர். அருணாஜோதி கருத்தரங்கின் நோக்கவுரையை வழங்கினார்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல் துறைத் தலைவர் முனைவர். சத்தியமூர்த்தி, மலேசிய சுல்தான் இட்ரீஸ் பல்கலைக்கழக மாணவர்களின் தமிழக வருகை குறித்தும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திற்கும் மலேசிய பல்கலைக்கழகத்திற்கும் இடையேயான மாணவர் பரிமாற்ற நிகழ்வுகள் குறித்தும் எடுத்துரைத்தார். மலேசியாவிலிருந்து வந்த 24 மாணவர்கள் தமிழகத்தில் பல்வேறு கல்லூரி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
மலேசியா சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் முனைவர். கார்த்திகேஸ் பொன்னையா, மலேசிய ரப்பர் தொழிற்சாலைகள் மற்றும் இஸ்லாமியம், பெண்கள் குறித்த தலைப்புகளில் பேசினார். அதே பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர் முனைவர். இளங்குமரன் சிவநாதன், அற இலக்கியங்களில் காணப்படும் பண்பாட்டுப் பதிவுகள் குறித்து விளக்கினார். தூய தமிழ்ப் பற்றாளர் முனைவர். ராஜேந்திரன், சமயங்கள் போதிக்கும் அன்பு மற்றும் நீதி குறித்து பேசினார்.

கருத்தரங்கின் ஒரு பகுதியாக, “அற இலக்கியங்களில் பண்பாட்டுப் பதிவுகள்” என்ற தலைப்பிலான ஆய்வு நூல் வெளியிடப்பட்டது. கட்டுரைகளை சமர்ப்பித்த ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுகளை முன்வைத்தனர். நூலின் முதல் பிரதியை நிறுவனர் அல்ஹம்துலில்லாஹ் வாவு செய்யிது அப்துர் ரஹ்மான் வெளியிட, முனைவர் போ. சத்தியமூர்த்தி பெற்றுக்கொண்டார்.
நிகழ்வுக்கான ஏற்பாடுகளை தமிழ்த்துறைத் தலைவர் முனைவர். ஏஞ்சல் லதா தலைமையில் தமிழ்த் துறைப் பேராசிரியர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர். இந்தக் கருத்தரங்கில் மலேசியாவில் இருந்து வந்திருந்த 24 மாணவ மாணவியர், கட்டுரையாளர்கள் மற்றும் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் பேராசிரியர்கள், மாணவியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தமிழ்த் துறைப் பேராசிரியர் ஷைனி நன்றி கூறினார்.
கருத்தரங்கம் முடிவுற்றதும் காயல்பட்டணத்தில் உள்ள பழமை வாய்ந்த இடங்களை காண சென்றனர். காயல்பட்டினம் வரலாற்று ஆய்வு மைய பொருளாளர் ஹாஜி. அஹமது முஹ்யித்தீன் வழிகாட்டுதலில் மஹ்லரா அரபிக் கல்லூரி, குத்பா பெரிய பள்ளி, கற்புடையார் பள்ளி போன்ற பள்ளி வாசல்கள் கண்டு அவற்றின் தொன்மையும் சிறப்பையும் அறிந்து கொண்டனர். நிறைவாக கொம்புத்துறை முடியப்பர் ஆலயத்தை பார்வையிட்டு அதன் வரலாற்றை அறிந்தனர்.












