அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: தொடக்க விழா செப்டம்பர் 22 ம் தேதிக்கு மாற்றம் !

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கம்:
தொடக்க விழா செப்டம்பர் 22 ம் தேதிக்கு மாற்றம் !

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் செப்.22 ஆம் தேதி அன்று முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட உள்ளது. முதல்வர் ஜோசப் விஜய் முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்றுள்ளதால் நாளை நடைபெறவிருந்த இந்நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் ஏற்கனவே அமலில் இருந்து வருகிறது. கடந்த ஸ்டாலின் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இத்திட்டத்தை, தற்போதைய ஜோசப் விஜய் அரசு எட்டாம் வகுப்பு வரை நீட்டித்து காமராஜர் காலை உணவுத்திட்டம் என பெயர் மாற்றம் செய்து விரிவாக்கம் செய்ய உள்ளது.இதன் மூலம் 1 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை உள்ள சுமார் 33,14,274 மாணவர்கள் பயன் பெறுவர்.

இதற்கான தொடக்க விழா பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறும் என்றும், காமராஜர் படித்த விருதுநகரில் உள்ள பள்ளியில் இத்திட்டத்தை முதலமைச்சர் துவக்கி வைப்பார் என்றும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.

இதுபோன்ற சூழலில், முதலமைச்சர் ஜோசப் விஜய் தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டனுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளதால், செப்.17 ஆம் தேதி இத்திட்டத்தின் தொடக்க விழா சாத்தியில்லாத காரணத்தினால் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்க நிகழ்ச்சி செப்டம்பர் 17ஆம் தேதிக்கு பதிலாக 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூக நலத்துறை செயலாளர் பல்லவி பல்தேவ் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்க விழா 17ஆம் தேதிக்குப் பதிலாக 22ஆம் தேதி சென்னையில் நடைபெறும். சென்னையில் இத்திட்டத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் 6 முதல் 8ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு தொடங்கி வைப்பார். அதே நேரத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் அமலுக்கு வரும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “இடைத்தேர்தல் நடைபெறக்கூடிய தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளைத் தவிர்த்து மற்ற அனைத்து இடங்களிலும் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் செப்டம்பர் 22 ஆம் தேதியிலிருந்து செயல்பாட்டுக்கு வந்துவிடும்” என்றும் தெரிவித்துள்ள அவர், இதற்கேற்ப அனைத்து ஏற்பாடுகளையும் செய்து பள்ளிகள் மற்றும் கல்வி அலுவலர்கள் தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள 15,454 பள்ளிகளில், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான 15,14,274 மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே 1 முதல் 5 ம் வகுப்பு வகுப்பு வரை கிட்டத்தட்ட 18 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வரும் சூழலில் மேலும் இதன் விரிவாக்கத்தினால் சுமார் 33,14,274 மாணவர்கள் பயன் பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.