கலசலிங்கம் பார்மஸி கல்லூரியில் 29-வது பட்டமளிப்பு விழா :
இணை இயக்குநர் ராதா 119 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் !
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் அருள்மிகு கலசலிங்கம் பார்மஸி கல்லூரியின் 29-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இவ் விழாவிற்குத் தாளாளர் அறிவழகி தலைமை தாங்கினார். கல்லூரியின் செயலாளர் சசி ஆனந்த், இயக்குநர் அர்ஜுன் கலசலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி முதல்வர் முகமது ஷேக் அரபத் வரவேற்புரையாற்றி, கல்லூரியின் கல்விச் சாதனைகள் மற்றும் ஆய்வுகளின் முன்னேற்றம் குறித்த ஆண்டறிக்கையை வாசித்தார்.
விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் மருந்தியல் துறை இணை இயக்குநர் ராதா பட்டமளிப்பு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில்,
“நவீன மருத்துவ உலகில் மருந்தியல் துறையின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆராய்ச்சி, மருந்து உற்பத்தி, மருத்துவமனை மருந்தியல் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் இளம் பட்டதாரிகளுக்கு விரிவான வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. மாணவப் பட்டதாரிகள் தங்களது திறமைகளைத் தொடர்ந்து வளர்த்துக்கொண்டு, இத்துறையில் உள்ள வாய்ப்புகளைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டு சமூகத்திற்கு நற்பணி ஆற்ற வேண்டும்.”
தொடர்ந்து, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் இளநிலை மருந்தியல், முதுநிலை மருந்தியல் மற்றும் மருந்தியல் முனைவர் ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்ற 119 மாணவ-மாணவியருக்குப் பட்டங்களையும் சான்றிதழ்களையும் இணை இயக்குநர் ராதா வழங்கி வாழ்த்தினார்.
இவ் விழாவில் பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், மாணவ-மாணவியர் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.












