ஆசிரியர் தெய்வங்களை ஆசிரியர் தினத்தில் நினைவு கூர்கிறேன் !

ஆசிரியர் தெய்வங்களை ஆசிரியர் தினத்தில் நினைவு கூர்கிறேன் !

1975 எனது அப்பா பரமக்குடியில் ஏஎஸ்ஐ – காவல் உதவி துணை ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். நான் அப்போது பரமக்குடியில் உள்ள பள்ளியில் பேபி கிளாஸ் படித்து வந்தேன்.

நான் எங்களுடைய காவலர் குடியிருப்பில் இருந்து சைக்கிள் ரிக்க்ஷாவில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். நான் செல்லும் ரிக்ஸா குழந்தை மாமாவுக்கு சொந்தமானது. தினமும் என்னை வீட்டில் வந்து அழைத்து என்னை தூக்கி ரிக்ஷாவில் அமர வைத்து நான் புத்தகம் வைத்து இருக்கும் எனது அலுமினிய சூட்கேஸை எடுத்து அதையும் ரிக்சாவில் எடுத்து செல்வது வழக்கம்.

நானும் எனது சகோதரியும் இந்த ரிக்சாவில் சென்று வருவோம் வீட்டில் இருந்து பள்ளிக்கு அழைத்து செல்லும் குழந்தை மாமா பள்ளியில் இறக்கிவிட்டு அந்த அலுமினிய பெட்டியை கையில் கொடுத்து டாட்டா போட்டுவிட்டு செல்வார். இது தினந்தோறும் நடக்கும் வழக்கமானது.

ஆனால் எனக்கு அந்த பள்ளியில் ஆசிரியர் என் கூட படித்த மாணவர்கள் யார் என்று நினைவு இல்லை .இது சில நேரங்களில் நாம் உண்டு நமது வேலை உண்டு என்று இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் ஆசிரியர்களின் நிலைப்பாட்டை காட்டுகிறது.

அதன் பிறகு 1976 இல் எனது அப்பா பதவி உயர்வு பெற்று காவல் உதவி ஆய்வாளராக திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி என்ற கிராமத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்டு நாங்கள் அங்கே குடி புகுந்தோம். அங்கு நான் ஒன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு வகுப்பினை அரசு தொடக்கப் பள்ளியில் பயின்றேன். அங்கும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களை எனக்கு நினைவில் கொள்ள முடியவில்லை .ஆனால் அந்த ஊரில் இருந்த பெரியவர்கள்,சில கடைகள் சில வீடுகளில் இருந்து வசித்த பெரியவர்கள் மற்றும் நண்பர்களை நினைவில் இருக்கிறது .

அதன் பிறகு 1978 இல் எனது அப்பா சுத்தமல்லியில்  இருந்து மாறுதலாகி அப்போதைய திருநெல்வேலி மாவட்டம் கரிவலம் வந்தநல்லூருக்கு பணி மாறுதல் செய்யப்பட்டு நாங்கள் அனைவரும் கரிவலம்வந்த நல்லூருக்கு குடி அமர்ந்தோம் .அங்கே நான் மூன்றாம் வகுப்பை அரசு தொடக்கப்பள்ளியில் பயின்றேன். அங்கேயும் ஆசிரியர்கள் நினைவில் கொள்ள முடியவில்லை ஏனென்றால் இங்கே இருந்து ஆசிரியர்களும் தனது பணியை மட்டுமே சிறப்பாக மேற்கொண்டனர் .

அங்கு என்னுடன் மூன்றாம் வகுப்பு கல்வி பயின்ற மாணவி வசந்தி அவரும் ஒரு காவலர் மகள் ஆவார் .அவர் மட்டும் எனது வீட்டில் எனது சகோதரியிடம் டியூஷன் படிக்க தினமும் வருவதனால் எனக்கு அவருடைய நினைவு இன்றும் மனதில் இருக்கிறது. ஆனால் அவள் தற்போது எங்கே என்று தெரியவில்லை.

அதன் பிறகு எனது அப்பா கரிவலம் வந்தநல்லூரில் இருந்து 1979 ம் ஆண்டு தூத்துக்குடிக்கு பணிமாறுதல் செய்யப்பட்டு நாங்கள் அனைவரும் தூத்துக்குடிக்கு வந்து சேர்ந்தோம்.அப்போது 1979 ல் நான் நான்காம் வகுப்பு தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியில் உள்ள துவக்கப்பள்ளியில் கல்வி பயின்றேன்.

நான் அப்போது எல்லாம் வகுப்பில் முதல் அல்லது இரண்டாவது மாணவனாக கல்வியில் சிறந்து விளங்கினேன்.அப்போது எனது நான்காம் வகுப்பு ஆசிரியர் ஐயா திரு. செல்வராஜ் அவர்கள் எனக்கு வகுப்பு ஆசிரியராக இருந்தார்கள் .அவர்கள் மிகவும் ஆசிரியருக்கு ஏற்ற தோரணையில் மிடுக்காக இருப்பார்கள் .அவரைக் கண்டால் ஒரு பயம் கலந்த மரியாதையுடன் நாங்கள் கல்வி பயின்றோம் அவரை எனக்கு இன்றும் நினைவில் இருக்கிறத. அவருடன் எடுத்த போட்டோவும் ( இதில் பகிர்ந்துள்ளேன் ) என்னுடன் இருக்கிறது.

அப்பொழுது எனக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுத்த அம்மா ஜெமி டீச்சர் அவர்களை நான் நினைவில் கொள்ள வேண்டும். நான் உருவத்தில் சிறிது குள்ளமாக இருந்ததனால் நான் நன்றாக படிப்பதனால் என்னை டீச்சர் கரும்பலகையில் எழுதி அதனை மற்ற மாணவர்களுக்கு வாசிக்க சொல்லுவார். எனக்கு கரும்பலகை உயரம் எட்டாத காரணத்தினால் தனது இருக்கையான நாற்காலியை எனக்கு கொடுத்து அதன் மீது ஏறி என்னை கரும்பலகையில் எழுதி இருக்கும் ஆங்கில பாடத்தை வாசிக்க சொல்வார்கள் .அவர்கள் அனைவரிடமும் மிகுந்த அன்புடன் நடந்து கொள்வார்கள் .என்னிடம் அதற்கு ஒரு படி மேலாக மிகவும் பாசத்தை காட்டுவார்கள். அந்த ஆசிரியையை பார்த்தாலே நமக்கு கல்வி கற்க எண்ணம் தோன்றிவிடும் அவ்வளவு அன்பான ஆசிரியர் .

அதன் பிறகு 1980 ல் நான் ஐந்தாம் வகுப்பு அதே கால்டுவெல் தொடக்கப்பள்ளியில் கல்வி பயின்றேன் அப்போதைய ஆசிரியர் முகம் மனதில் இருக்கிறது ஆனால் அந்த ஆசிரியையும் கண்டிப்பானவர் . ஆனால் தான் உண்டு தனது வேலை உண்டு என்பதோடு நிறுத்திக் கொள்வார்கள்.

அதன் பிறகு நான் தொடக்கப்பள்ளி படிப்பினை முடித்துக் கொண்டு கால்டுவெல் மேல்நிலைப்பள்ளியில் 1981இல் ஆறாம் வகுப்பில் சேர்ந்தேன் .அப்பொழுது என்னுடைய வகுப்பு ஆசிரியர் ஐயா திரு. ஸ்டாலின் ராஜேந்திரன் அவர்கள் எனது வகுப்பு ஆசிரியராக இருந்தார்கள்.அவர்கள் அழகான கூலிங் கிளாஸ் அணிந்து புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாதிரி  தலையில் முடியினை முன்னால் சுருட்டி வைத்துக் கொண்டு அதிகமான பவுடரை கழுத்தில் பூசிக்கொண்டு வருவார்கள்.

அப்பொழுதுதான் அவர்களுக்கு திருமணம் ஆனது.புதிதாக ஒரு பி எஸ் ஏ சைக்கிளை வாங்கி அதில் வந்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது என்னுடன் பயின்ற நண்பன் உமா சங்கர் அவருடைய தந்தை தூத்துக்குடி துறைமுகத்தில் பணிபுரிந்து வந்தார்கள். எனவே அவர் துறைமுக குடியிருப்பில் இருந்து துறைமுக பேருந்தில் பள்ளிக்கு வருவார். அன்று நடந்த சம்பவம் மிகவும் ஆசிரியருக்கு கோபத்தை கொடுத்தது.

அதாவது நண்பர் உமா சங்கர் ஆசிரியர் வரும்போது ஒரு பிரம்பை வைத்துக்கொண்டு ஆசிரியரின் புதிய சைக்கிளின் சக்கரத்தினுள் உள்ளே செலுத்தி விட்டார் .அப்போது அதனுடைய கம்பிகள் கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட கம்பிகள் உடைந்து விட்டது .அன்றைய தினம் எங்களது வகுப்பு ஆசிரியர் திரு. ஸ்டாலின் ராஜேந்திரன் அவர்கள் அந்த மாணவனை அதாவது நண்பன் உமா சங்கரை மிகவும் அடித்து விட்டார்கள். கோபத்தில் ஆதனால் அந்த மாணவன் இரண்டு நாள் பள்ளிக்கு வரவில்லை. எனவே ஆசிரியர் அவரது வீட்டுக்கு சென்று அங்கே நடந்தது என்ன என்று எங்களால் யூகம் செய்ய முடிந்தது .அவர் அங்கே மாணவரின் வீட்டில் பெற்றோர்களிடம் உங்கள் மகன் இவ்வாறு செய்துவிட்டார் அதனால் நான் கோபத்தில் அடித்து விட்டேன். இருந்தாலும் நான் சின்ன பையனை கண்டித்து இருக்க வேண்டும் அவனை அடித்தது எனக்கு மிகுந்த மன வேதனையாக இருக்கிறது. எனது தவறுக்கு வருந்துகிறேன் என்னை மன்னித்து கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டதற்கு இணங்க மறுநாள் நண்பர் உமா சங்கர் பள்ளிக்கு திரும்பினார்.

இதன் மூலம் எங்கள் ஆசிரியர் எங்களுக்கு ஒரு பாடம் கற்றுக் கொடுத்தார்.அதாவது தவறு செய்பவர்களை நாம் கண்டிக்க வேண்டும்.அதேவேளையில் நாம் தவறு செய்தால் அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதனை உணர்த்தியது.

அதன் பிறகு 1982 ஆம் ஆண்டு நான் அதே பள்ளியில் ஏழாம் வகுப்பில் சேர்ந்தேன். நான்காம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை நான் கால்டுவெல் மேல்நிலைப்பள்ளியில் தான் கல்வி பயின்றேன்.ஏழாம் வகுப்பில் எனது வகுப்பு ஆசிரியர் திரு.மலைக்டன் அவர்கள் . எப்பொழுதும் அவர் பேச்சில் ஒரு விசில் பறக்கும் விசில் சத்தம் ஒலித்துக் கொண்டே இருக்கும் .மிகவும் கண்டிப்பானவர் .கோபம் வந்தால் என்ன செய்வார் என்று யாருக்கும் தெரியாது.

ஒரு தடவை அவர் கோபத்தில் வரிசையாக மாணவர் ஒவ்வொருவரையும் உங்கள் தந்தை என்ன வேலை செய்கிறார்கள் என்று கேட்டுக்கொண்டே இருந்தார். அப்பொழுது ஒவ்வொரு மாணவராக தங்களது தந்தை பணி செய்யும் விவரத்தை கூறி வந்தார்கள். என்னுடைய முறை வரும்போது நான் எனது அப்பா போலீஸ்காரர் என்று சொன்னேன். உடனே அவர் உட்காரு ராசா என்று என்னை அமர சொன்னார்கள். .இன்னொரு மாணவன் ஒரு அரசு அதிகாரியாக இருப்பதாக தனது தந்தையை கூறினார். அவரையும் உட்காருப்பா என்று உட்கார வைத்து விட்டார். அப்பொழுது மூன்றாவது மாணவன் எனது அப்பா கூலி வேலை செய்கிறார்கள் என்று கூறினார் .உடனே அந்த மாணவனை எங்கள வகுப்பு ஆசிரியர் திரு.மலைக்டன் அவர்கள் வேகமாக இரண்டு மூன்று அடி அடித்து விட்டார். நாங்கள் அப்போது என்ன நினைத்தோம் என்றால் எங்களுடைய தந்தை எல்லாம் அரசு வேலையில் இருக்கிறார்கள் எனவே அவர் எங்களை அடிக்க யோசிக்கிறார் என்று நினைத்தோம். ஆனால் எங்களுடைய நினைப்பு  தவறாகிவிட்டது. என்னவென்றால் எனது அப்பா போலீஸ்காரர் எனவே எனது அப்பா என்னை கண்டிப்பார் என்ற நோக்கத்திலும் அந்த மாணவனுடைய அப்பா கூலி வேலை பார்ப்பதால் கூலி வேலை பார்த்துக்கொண்டு தனது மகனை கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார் எனவே அவருடைய மகனை நாமும் சேர்ந்து கண்டிக்க வேண்டும், அவனை நல்வழி படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அவர் அந்த பையனை கண்டித்துள்ளார், என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம்.

இவ்வாறு ஆசிரியர்களின் நிலை ஒவ்வொன்றும் நல்லதையே செய்து கொண்டிருந்தது. அவர்கள் எண்ணங்கள் அனைத்துமே நாங்கள் சிறந்த வழியில் முன்னேற வேண்டும் ,வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டிய என்ற நோக்கத்திலேயே அவர்களுடைய அன்பும் கண்டிப்பும் சிறப்பாக அமைந்திருந்தது.

எட்டாம் வகுப்பில் 1988 ஆம் ஆண்டு சேர்ந்தேன் .அப்பொழுது என்னுடைய வகுப்பு ஆசிரியர் ஐயா திரு.தர்மராஜ் அவர்கள். எப்படியும் அவர்களுக்கு அப்போது 50 வயதை தாண்டி இருக்கும் நடந்து தான் வருவார்கள். அவருடைய டிரஸ் கோடு வேஷ்டி சட்டையில் புதியது போன்று தோன்றும் . ஒருநாள் அவர் கட்டிய வேட்டியை மறுநாள் கட்டமாட்டார். அவ்வளவு சுத்தமாக நீட்டாக வருவார் .அவரும் மிகவும் கண்டிப்பானவர் தான் நாம் எட்டாம் வகுப்பு வரை நான் வகுப்பில் முதல் அல்லது இரண்டாம் மாணவனாக வருவேன்.நானும் எனது நண்பன் கமலக்கண்ணன் அவர் தற்பொழுது சென்னையில் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.நாங்கள் இருவரும் மாறி மாறி முதல் இரண்டாவது இடத்தை பிடிக்க போட்டி கொண்டிருப்போம்.எனவே எங்களை விட மற்ற மாணவர்களை நன்றாக கண்டிப்பார் .அவருடைய செயல் அதாவது அவருடைய டிரஸ் கோட் நாம் எவ்வளவு அழகாக நீட்டாக ,சுத்தமாக இருக்க வேண்டும் என்பதையும் , அதுதான் ஒரு மாணவனுக்கு நல்லொழுக்கத்தை, சிறந்த படிப்பினை தரும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கினார்.

அதன் பிறகு 1984 ஆம் ஆண்டு நான் ஒன்பதாம் வகுப்பில் கல்வி பயின்றேன். அப்பொழுது எனது வகுப்பு ஆசிரியர் ஐயா எல்மர் அவர்கள் பார்ப்பதற்கு நடிகர் நிழல்கள் ரவி போன்று பெல் பாட்டம் பேண்ட் அணிந்து இருப்பார் கருமையான தோற்றத்துடன் அழகாக இருப்பார்கள்.ஆனால் மிகவும் தங்கமான ஆசிரியர் யாரையும் மனம் வருந்தும் படி ஒரு நாளும் நடக்கமாட்டார்கள்.அந்த ஒரு ஆண்டில் நாங்கள் முழுவதுமாக ஆசிரியரை வாட்ச் பண்ணியிருக்கிறோம் ஒரு நாள் கூட அவர் திட்டியதில்லை .இந்த வேளையில் நான் வகுப்பில் முதல் அல்லது இரண்டாவது பெஞ்சில் அமர்ந்திருப்பது வழக்கம்.ஆனால் நான் திடீரென்று சேர்க்கை மாறி கடைசி பெஞ்ச் நண்பர்களுடன் வந்து அமர்ந்தேன்.

அப்பொழுதுதான் ஆசிரியர் அவர்கள் என்னை கண்டித்து நீ ஏன் அங்கே  அமர்ந்திருக்கிறாய் இங்கே வந்து அமர்ந்து கொள் என்று மாற்றி என்னுடைய வாழ்க்கை வட்டம் திசை திரும்பாமல் இருப்பதற்கு வழி வகுத்தார்கள் .அல்லது என்னுடைய வாழ்க்கை தற்பொழுது வேறு மாதிரி சென்று சரியாக படிக்காமல் இருந்திருப்பேன்.

அவர் மிக அருமையாக கிட்டார் வாசிப்பார்கள் மிக அழகாக நடந்து வருவார்கள். அவர்கள் அசைவுகள் அவரைப் போன்றே மென்மையானது, ரசித்துக் கொண்டே இருக்கலாம்.

அதன் பிறகு நான் பத்தாம் வகுப்பு 1985 ல் சேர்ந்தேன் .அப்பொழுது வகுப்பு ஆசிரியர் ஐயா திருவாளர் ஹென்றி அவர்கள்.மிகவும் கண்டிப்பானவர் ஒவ்வொரு மாணவரின் தோளில் கை வைத்து ஒரு தந்தையைப் போல, ஒரு சகோதரனைப் போல பழகுவார்கள் ஆனால் தவறு செய்தாலோ சரியாக படிக்க விட்டாலும் அவர் நேர் எதிராக கோபத்திற்கு மாறிவிடுவார்கள் .காதை பிடித்து அப்படியே அவர்கள் ஒரு திருக்குத் திருக்கி கிள்ளி விடுவார்கள். காது அந்த அளவுக்கு சிவப்பாக மாறி விடும். அப்படிப்பட்ட ஒரு ஆசிரியர்.

மாணவர்கள் நன்றாக அவர் சந்தோஷமாக பேசும் பொழுது நண்பர்கள் எல்லாம் அவரிடம் 10 ரூபாய் வாங்கி இருக்கிறார்கள் .அப்பொழுது 1985 இல் 10 ரூபாய் தற்பொழுது 200 ரூபாய்க்கு சமம். இது எதை காட்டுகிறது என்றால் அன்பாக பழக வேண்டும் அதேவேளையில் கண்டிக்கும் வேளையில் தண்டிக்க தவறக் கூடாது என்று எடுத்துரைக்கிறது.

அவர்கள் பணி ஓய்வு பெற்ற பிறகும் எங்களை எங்கு பார்த்தாலும் தோளில் கைவைத்து என்ன செய்கிறாய் ,இத்தனை குழந்தைகள், மனைவி என்ன செய்கிறார்கள் என்று ஒரு குடும்பத்தில் ஒருவராக விசாரிப்பார்கள். அவர் ஓய்வு பெற்ற பிறகு அவருடைய மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் போது அவரிடம் இருந்து சில நாட்களை வாழ்க்கையை கழித்து வந்தார்கள். அங்கேயே அவர்கள் நோய்வாய்ப்பட்டு தனது உயிரை இழக்க நேர்ந்தது. அவர்களை இன்றும் நினைத்தாலும் மிகவும் மனது வேதனைப் படும்.ஏனென்றால் அவர்கள் ஒவ்வொருவருடைய நலம் விரும்பியாக இருந்தார்கள்.அவர்களை எப்பொழுதுமே மறக்க முடியாது.

அதன்பிறகு பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு 11ஆம் வகுப்பு சேர்ந்தேன் என்னுடன் எனது நண்பர்  நெருங்கிய என் மீது மிகவும் பாசமும், அன்பும் கொண்ட நண்பர் தற்போதைய தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியின் முதல்வர் டாக்டர் .வீரபாகுஅவர்கள் ஐந்தாம் வகுப்பு முதல் என்னுடன் பன்னிரண்டாம் வகுப்பு வரை கால்டுவெல் பள்ளியில் படித்தார்கள். இந்த நேரத்தில் நாங்கள் பத்தாம் வகுப்பு முடிந்து 11ஆம் வகுப்பு அறிவியல் பாடத்தை தேர்ந்தெடுத்து படித்து வந்தோம்.

அப்பொழுது பதினொன்றாம் வகுப்பில் எங்களுடைய விலங்கியல் ஆசிரியராக ஐயா திருவாளர் தர்மராஜ் அவர்கள் இருந்தார்கள். அவரைப் பார்த்தால் ஒரு சினிமா ஹீரோ போல் இருப்பார்கள் மிகவும் அழகாக நிறமாக தினமும் ஒரு பேண்ட் சட்டை அணிந்து அதை டக் இன் செய்து, பெல்ட் அணிந்து, ஷூ அணிந்து கம்பீரமாக நடந்து வருவார்.

அவர் நடந்து வரும் போது டக் டக் டக் என்று சத்தம் வரும்.அந்த வயதிலேயே அவரை பார்த்து பொறாமை பட வைக்கும். அவர் சில பேருடன் நன்றாக பழகுவார் அதில் நண்பர் வீரபாகுவும் உண்டு. என்னிடம் அதிகமாக பேச மாட்டார்கள். நீ இப்படி படித்தால் எங்கே பாஸாவது கேள்விக்குறியாகி விடும் என்று என்னை அடிக்கடி சொல்வார்கள். அந்த சமயத்தில்தான் அவர்களுக்கு திருமணம் ஆனது .அவருடைய மனைவி தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் தான் உதவி பேராசிரியராக வேலை பார்த்தார்கள் .எனது விலங்கியல் ஆசிரியரை பார்க்கும்போது அப்பொழுது ஷோலே ஹிந்தி படம் வந்து சில வருடங்கள் ஆகியிருந்தது. அதில் நடித்திருந்த தர்மேந்திரா மாதிரி கிட்டத்தட்ட இருப்பார்கள். வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கும் போது மாணவர்கள் பேசிக்கொண்டிருந்தால் கையில் வைத்திருக்கும் சாக்பீஸை ஆள்காட்டி விரலால் உடைத்து உடனே தூக்கி சரியாக 30 அடி தூரத்தில் உள்ள மாணவர்களின் மீது மிகச் சரியாக வீசி கவனத்தை பாடத்திற்கு கொண்டு செல்வார்கள் . அவ்வளவு நுணுக்கமாக அவர்கள் குறிபார்த்து எறிவதில் வல்லவர்.

அதன் பின்னர் நான் பதினொன்றாம் வகுப்பு முடித்து 12ஆம் வகுப்பிலும் எனக்கு அவர் தான்  விலங்கியல் ஆசிரியராக இருந்தார் .அந்த 12 ஆம் வகுப்பில் நான் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் எடுத்தது விலங்கியல் பாடத்தில் தான் . எனது மதிப்பெண்ணை பார்த்து ஆச்சரியப்பட்டார் ஐயா தர்மராஜ் ஆசிரியர்.நீயா இவ்வளவு மதிப்பெண் பெற்று இருக்கிறாய் என்று என்னை பாராட்டினார்கள்.

காலங்கள் வருடங்கள் கடந்தது தற்போது 3 மாதங்களுக்கு முன்னர் தூத்துக்குடி வேலவன் ஹைப்பர் மார்க்கெட்டில் எனது ஆசிரியர் தர்மராஜ் அவர்களை சந்தித்தேன் அப்படியே உறைந்து போனேன் 67 வயதுதான் இருக்கும்.நடக்க முடியாமல் நடை தளர்ந்து துணைக்கு ஆட்டோ டிரைவருடன் மார்க்கெட்டில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்த ஆசிரியர் அவர்களிடம் அறிமுகப் படுத்திக் கொண்டேன் ஐயா என் பெயர் பொன் பலவேச ராஜ் 1987 பிளஸ் 2 சயின்ஸ் ஸ்டூடன்ட் என்றேன்.உடனே ஆ நினைவு இருக்கிறது என்று ஆரம்பித்த ஆசிரியர் தன்னுடன் வந்த ஆட்டோ டிரைவரிடம் என் மாணவன் மிகவும் ஒழுக்கமான என் பையன் என்றார்..இதைத் தவிர வேறு என்ன வேண்டும்..நன்றாக படிப்பான் என்பதை விட ஒழுக்கமான,கீழ் படிதலுள்ள மாணவன் என்று என்னை என் ஆசிரியர் சொன்னதை மிகவும் பெருமையாக கருதுகிறேன்.

உடனே என்ன சார் இப்படி மெலிந்து நடக்க முடியாமல் நீங்கள் இருப்பது வேதனையாக இருக்கிறது என்றேன்.கண்ணில் எனக்கு கண்ணீர் கசிந்தது.

மனதை சிறிது ஒரு நிலை படுத்தி அந்த டிரைவரிடம் எனது சார்..நான் படிக்கும் போது எவ்வளவு அழகாக தினமும் வேறு வேறு உடை அணிந்து ஹுரோ மாதிரி பள்ளிக்கு வருவார்கள்..மனசு சங்கடமாகி எனக்கு பேச்சு வரவில்லை.

சார் உடனே எனது பேச்சை திசை திருப்பும் வகையில் டேய் அது இல்லைடா மகன் வெளிநாட்டில் இருக்கிறான் அவனுடன் போய் 3 வருடங்கள் இருந்தேன் நல்லா இருக்கேன் டா..அது சரி மனைவி என்ன பண்றாங்க குழந்தை என்ன படிக்கிறாங்க என்றார்கள்..மனைவியை பற்றி சொல்லிவிட்டு நிறுத்தினேன்.தொடர்ந்தார் குழந்தை என்றார்.இதுவரை இல்லை சார் என்றேன் எனது கையை பிடித்து கொண்டார் கவலை படாதே இறைவன் பார்த்துக் கொள்வார்..நல்லா இருப்பே டா உடல் நலனை பார்த்துக்கோ என்று விடை பெற்றார்.என் கண்கள் அவரையே நோக்கியது .

பள்ளிக் காலங்களில் டக்.டக்..டக்…என்று வீர நடைபோட்டு வந்த கால்கள் சர்.சர்.என்று இழுத்து நடந்தது..என் மனம் என்னை அறியாமல் சார்.சார்..என்று துடித்தது.

மேலும் பன்னிரண்டாம் வகுப்பில் எங்களுக்கு எபனேசர் ஐயா அவர்கள் வேதியியல் ஆசிரியர்.அவர்கள் தான் எங்கள் வகுப்பு ஆசிரியராக இருந்தார்கள்.அவர்கள் சரி சரி என்று கேட்டுக் கொண்டே போவார்கள் பாடத்தை நன்றாக நடத்துவார்கள். ஓய்வு பெற்ற பின்னர் அவர்களை சந்திப்பேன்.நலம் விசாரிப்பார்கள்.அதன் பின்னர் எனக்கு திருமணம் ஆன பிறகு அடிக்கடி இரவில் பஜாரில் உணவு பார்சல் வாங்க வருவார்கள். நான் விருப்பப்பட்டு அவர்களுக்கும் சேர்த்து பணம் கொடுப்பேன் அப்போது அவர்கள் ஏன்டா நான் கொடுக்கிறேன் என்பார்கள்.அதற்கு நான் எனக்கு ஆசையாக உள்ளது சார் எனவே நான் கொடுக்கிறேன் என்று கூறுவேன்.அப்பொழுது அங்கே இருக்கும் அனைத்து பெரியவர்களிடம் என்னைப் பற்றி என் பையன் என் சாப்பாட்டிற்கு பணம் கொடுக்கிறான் என்று பெருமையாக பேசுவார்கள் .

ஆனால் அந்த நேரத்தில் நாங்கள் மிகவும் பயந்தவர்கள் எங்களுடைய ஆங்கில ஆசிரியர் நாங்கள் முதலாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு தமிழ் வழியில் தான் கல்வி பயின்றேன். எனவே எனக்கு மற்ற பாடங்களை தவிர ஆங்கிலம் சுட்டுப் போட்டாலும் வராது. என்னை மாதிரி நிறைய மாணவர்களுக்கும் அதேதான். ஒரு சில மாணவர்களை தவிர அனைவருக்கும் ஆங்கிலம் வருவதில் சிக்கலாக இருந்தது.

அந்த நேரத்தில் தான் இந்த ஆங்கிலத்துறை ஆசிரியர் தினமும் பேருந்தில் வருவார்கள் வேலைக்கு. அப்பொழுது ஆங்கில பாடத்தில் உள்ள கட்டுரை வின்சென்ட் சர்ச்சில் கட்டுரை ஒன்று மிகவும் ஃபேமஸான கட்டுரை அடிக்கடி அந்த பெயரை அவர் உச்சரிப்பதால் நான் அவர் பெயரை மறந்து விட்டேன். அவருடைய பெயரை நாங்கள் சர்ச்சில் என்று தான் கூப்பிடுவோம். சர்ச்சில் சார் சர்ச்சில் சார் என்று தான் நாங்கள் அழைத்து வந்தோம். எனவே அவருடைய பெயர் எனக்கு இன்று வரை நினைவில் இல்லை .

ஒவ்வொரு ஆங்கில பாடத்தில் உள்ள கட்டுரையும் மூன்று அல்லது நான்கு பக்கம் மன இருக்கும். கட்டுரையை ஒரு பக்கத்துக்கு சுருக்கி அதனை டைப் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து 25 பைசா கொடுத்தால் தான் அதை தருவார்கள். இதை படித்தால் நீ பாஸ் ஆகி விடலாம் அவர் ஒரு கிறிஸ்துவ மதத்தில் மிகவும் பற்றாளர் என்று சொல்ல வேண்டும். தீவிரவாதி என்றே சொல்லலாம். ஆனால் மிகவும் மனசாட்சிக்கு பயந்த ஆசிரியர் . அதாவது தம்பி நீ இதனை வாங்கி படி மனப்பாடம் செய்து எழுதி காட்டிவிட்டு தான் வெளியே செல்ல வேண்டும் .நீ இதை எழுதி காட்டவில்லை என்றால் தம்பி நீ மறித்துப் போவாய் என்று கூறுவார்கள். அதாவது அந்த வேத வசனத்தில் வருகிற மாதிரி அவர்கள் பேசுவார்கள் மறித்து போவார் என்று அவர்கள் கூறுவது பெயிலாகி என்ற அர்த்தத்தில் கூறுவார்கள் .

அந்த ஆசிரியர் இல்லை என்றால் நாங்கள் கிட்டத்தட்ட 75% மாணவர்கள் ஆங்கிலத்தில் நாங்கள் தேர்ச்சி பெறாமல் பன்னிரண்டாம் வகுப்பை தேர்ச்சி பெறாமல தவறி இருப்போம்.

அந்த ஆசிரியர் தான் எங்களை காப்பாற்றிய தெய்வமாகும். இன்றும் நான் அவரை நினைத்து பார்ப்பேன்.

அப்பொழுது அவர்களுக்கு 55 வயது இருக்கும். ஒரு பெரிய பேக் கையில் சுமந்து கொண்டு எங்களுடைய கால்டுவெல் பள்ளியின் கிரவுண்ட் தூத்துக்குடியில் மிகப்பெரிய பள்ளியாக இருந்தது.இந்த கிரவுண்ட் கூடைப்பந்து மைதானத்தில் இருந்து எங்களுடைய பள்ளியின் விடுதி வரை நடந்து செல்ல கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் ஆகும் .அவ்வளவு பெரிய மைதானத்தை கொண்ட பள்ளி .அப்பொழுது சுமார் 2300 மாணவர்கள் கல்வி பயின்று வந்தோம் அந்த நேரத்தில் தான் எங்களுடைய சீனியர் மாணவரான செல்லையா அவர்கள் அதாவது எனது நண்பர் முதல்வர் திரு. வீரபாகு அவர்களின் உறவினர் ஆவார்.அவர்கள் பத்தாம் வகுப்பில் மாநில அளவில் முதல் இடத்தை பெற்று எங்கள் கால்டுவெல் மேல்நிலைப்பள்ளிக்கு பெருமை சேர்த்தார்கள் .அந்த நேரத்தில் நாங்கள் கல்வி பயின்றதை மிகவும் பெருமையாக நினைத்தோம்.

அப்பொழுது அந்த ஆசிரியர் கை வீசி பேக்கை பிடித்து மெதுவாக நடந்து வருவார்.கிரவுண்டை கடந்து வர 20 நிமிடம் ஆகும். எங்களுக்கு பத்து நிமிடம் ஆனால் 20 நிமிடமா நடந்து வருவார்கள் . மிகவும் பொறுமையானவர். ஆனால் பாடம் என்று வந்து விட்டால் மிகவும் கண்டிப்பானவர் வகுப்பில் பாடத்தை தவிர எதுவும் பேசக்கூடாது. எந்நேரமும் நான் சொல்லுகின்ற ,கொடுக்கின்ற அந்த பக்கத்தினை படித்து மனப்பாடம் செய்து எழுதி விடுங்கள் அப்பொழுதுதான் நீங்கள் தேர்ச்சி பெறுவீர்கள் என்று மிகவும் வற்புறுத்தி அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற வைத்தவர் .அவர்கள் இல்லை என்றால் நாங்கள் கண்டிப்பாக பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற வாய்ப்பில்லை.அவரை எப்பொழுதும் நினைவு கூறுவேன் .

அப்பொழுது பள்ளியில் விளையாட்டு அதாவது PT ஆசிரியராக பாண்டியன் சார் இருந்தார்கள். அவர்கள் இருக்கும் போது எங்களுடைய பள்ளி கூடை பந்தில் முதலாவதாக வரும். அதாவது எங்களுடைய பள்ளி வீரர்களுக்கும் எங்கள் தூத்துக்குடியில் உள்ள தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளி வீரர்களும் மோதுவார்கள்.

அதாவது இருவருக்கும் நடக்கும் பந்தயம் மோதலாகவே இருக்கும். அதாவது இப்போது கிரிக்கெட் விளையாட்டில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுற மாதிரி அவ்வளவு வெறித்தனமாக மோதி விளையாடுவார்கள்.

அப்பொழுது எனது பள்ளி அணியின் தலைவராக அண்ணன் திரு எஸ் கே காளியப்பன் அவர்கள் இருந்தார்கள் மிகவும் கண்டிப்பானவர் ஆனால் அரவணைப்போடு தனது அணியை வழி நடத்துவார் .மிக அழகாக நிதானமாக வந்து பந்தினை கடத்தி செல்வார்அதேநேரத்தில் தான் அண்ணன் திரு.ரத்தினம் அவர்கள் மிகவும் உயரமாக இருப்பார்கள்.எதிரியிடமிருந்து பந்தை பிடித்து தட்டி கடத்தி செல்வதில் மிக நேர்த்தியானவர். அவர் பந்தை கடத்தி சென்று விட்டாலே அதனை வலையில் நுழைக்காமல் விட மாட்டார் அவ்வளவு திறமையானவர் .பந்து அவர் கையில் வந்து விட்டாலே நாங்கள் அனைவரும் சத்தம் ஒலி எழுப்புவோம் நாங்கள் எழுப்புற ஒலியை எங்களுடைய PT சார் உற்சாகப்படுத்துவார். அதாவது எண்ணம் அதனை வெளிப்படுத்துகிறது என்றால் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.நாம் நமது வீரர்களை உற்சாகப்படுத்தினால் தான் அவர்கள் வெற்றியை சந்திப்பார்கள். அவர்களை உற்சாகப்படுத்தும் ஒற்றுமையை கற்றுக் கொள்ளுங்கள் அது போராட்டமாக ஆகக்கூடாது ஆனால் அது நல்வழிப்படுத்தி நமது வெற்றிக்கு ஒரு உந்துதல் ஆக இருக்க வேண்டும் என்று வழி நடத்துவார்கள் .

அதே வேலையில் இன்னொரு PT சார் அவர் எனக்கு உறவினராக இருந்தாலும் ஐயா திருவாளர் செந்தூர் பாண்டியன் அவர்கள் PT மாஸ்டர் என்றாலே அவரைத்தான் எடுத்துக்காட்ட வேண்டும் .அவருடைய உடல் அமைப்பு புரட்சித் தலைவர் மாதிரி தலையில் சுருள் முடி,கர்லிங் ஹேர் வைத்திருப்பார்கள். ராயல் என்ஃபீல்டு வண்டியில் வருவார்கள். நமக்கு பொறாமையாக இருக்கும்.

அவரது ஸ்டைல் ராயல் என்பீல்டுக்கு பெருமை சேர்க்கும் அந்த அளவுக்கு மாஸ். எனக்கு மாமா முறையாக இருந்தாலும் தினமும் நாங்கள் காலையில் பள்ளிக்கு நாங்கள் எங்களுடைய சிறப்பு வகுப்பிற்கு காலையில் எட்டு முப்பது மணிக்கு வருவோம். அப்பொழுது தாமதமாக வரும் மாணவர்களை அவர்கள் கண்டிப்பார்கள். கையில் பிரம்பு வைத்திருப்பார்கள். அந்த பிரம்பை கொண்டு தாமதமாக வரும் மாணவர்கள் நண்பர்களின் கால் சட்டையின் பின்புறம் ஒரு அடி அடித்து கிரவுண்டில் ஒரு ரவுண்டு அடித்து வா என்பார்கள் .கிட்டத்தட்ட அந்த கிரவுண்டு ஒரு ரவுண்டு அடித்து வந்தாலே அது 600 மீட்டர் இருக்கும் .கொஞ்சம் தடிமனான மாணவரை இரண்டு ரவுண்டு அடித்துவா என்று சொல்வார்கள். அவர் கண்டிப்பது அந்த மாணவனுடைய உடலை குறைக்க வேண்டும் ,பிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரு உடற்பயிற்சியை காலையிலே அவர் கொடுத்துவிடுவார். இதற்காக தாமதமாக வருகிறோம் நமக்கு அடி விழும் என்று நோக்கத்தில் நண்பர்கள் இரண்டு கால் சட்டை அணிந்து வருவதும் உண்டு .

ஆசிரியருடைய அடிக்கு பயந்து இவ்வாறு பள்ளி படிப்பினை கடந்து வந்தோம் எனது பனிரெண்டாம் வகுப்பில் எனது தாவரவியல் பிராக்டிகல் நோட்டில் நான் படங்கள் மிக அழகாக வரைவேன்.எனது கையெழுத்து நன்றாக இருக்காது ஆனால் என்னுடைய படங்கள் கண்ணில் ஒத்துக்கொள்ளும்படி மிக தெளிவாக அழகாக வரைவேன். அது தாவரவியலும் சரி விலங்கியலும் சரி ஆனா தாவரவியல் விலங்கியலை காட்டிலும் மிக அழகாக வரைந்து இருப்பேன்.எனவே எனக்கு தாவரவியல் ஆசிரியர் திரு.ஐசக் அவர்கள் எனது நோட்டை வாங்கி வைத்துக் கொண்டார்கள் .நான்பின்னாளில் சாரிடம் எடுத்துச் சொல்லி அந்த நோட்டை வாங்கி வந்து விட்டேன் .

அந்த நேரத்தில் எங்களுக்கு இயற்பியல் பாடம் எடுத்த ஆசிரியர் திரு.சிமியோன் அவர்கள் மிகவும் கண்டிப்பாக இருப்பார்கள். அவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு ஆரம்பிக்கும் பொழுது படிப்பில் பின்தங்கிய மாணவர்களை தினமும் பள்ளிக்கு அழைத்து வரச் சொல்லி இரவில் அதாவது பள்ளி வேலை முடிந்த பிறகு இரவில் ஆறு மணி முதல் ஒன்பது மணி வரை சிறப்பு வகுப்புகள் எடுத்து பாடங்களை கற்றுக் கொடுத்து எங்களை தேர்ச்சி பெற வைத்தவர்.

இந்த அருமையான பள்ளி காலங்களை நாங்கள் கழித்து வந்தோம் .நாம் பள்ளி படிப்பை படிப்பது முக்கியமல்ல அதனை அந்த பள்ளி காலத்தை நாம் ரசித்து ஆசிரியர்களை நேசித்து அவர்களை நினைவு கூர்ந்தாலே நம் வாழ்க்கை சிறப்பாக அமையும். அவர்கள் எங்களுக்கு பாடத்தையும் நல்ல ஒழுக்கத்தை கற்றுக் கொடுத்தார்கள்.அந்த வகையில் நான் படிப்பினை கற்றுக் கொண்டேனோ இல்லையோ நல்ல ஒழுக்கத்தை நான் அதிகமாக கற்றுக் கொண்டேன்.

என்னுடைய பள்ளிக் காலங்கள் திரும்ப கிடைக்காதா வயது குறையாதா? மீண்டும் நாங்கள் பள்ளியில் சென்று பழைய வாழ்க்கைக்கு திரும்ப மாட்டோமா என்ற எண்ணங்கள் வருகிறது. எனக்கு பாடங்களை சொல்லித் தந்த ஆசிரியர்கள் அனைவருமே நல்லாசிரியர்கள்தான்.

நல்லாசிரியர் விருது என்று சொல்கிறார்கள் ஆசிரியர்கள் அனைவருமே நல்ல ஆசிரியர்கள் தான் .நாம் எந்த ஆசிரியரையும் குறை சொல்ல முடியாது .ஏனென்றால் ஒவ்வொரு மாணவரையும் தன்னுடைய பிள்ளை என்று அழைக்கக் கூடியவர் எனது மாணவன், எனது பையன்,எனது பையனை பார் அவன் டாக்டர் ஆகிவிட்டான், அவன்
என்ஜினியர் ஆகிவிட்டான்,கலெக்டர் ஆகிவிட்டான் என்று சந்தோசப்படுபவர் ஆசிரியராகத் தான் இருப்பார்கள்.

ஒரு பிள்ளையை பெற்ற தாய் கூட தனது பிள்ளையைத் தான் சிறப்பாக வளப்பார். ஆனால் ஒரு ஆசிரியர் தன் வகுப்பில் உள்ள அனைத்து பள்ளிகளையும் பாரபட்சம் இன்றி பாசத்தை காட்டுபவர்,கல்வியை ஊட்டுபவர் எனவே பாடம் சொல்லிக் கொடுக்கும் அனைத்து ஆசிரியர்களும் நல்ல ஆசிரியர்கள் தான்.யாரையும் நாம் குறை சொல்ல முடியாது.

நல்ல ஆசிரியர் விருது என்ற பேட்டை மாற்ற வேண்டும். நல்ல ஆசிரியர் விருது என்று சொல்வது என்னை பொறுத்தளவு அது தவறாக தான் தெரிகிறது .

இந்த ஆசிரியர் தினம் மற்றும் எனது பிறந்த நாளில் எனக்கு கல்வி கற்றுக் கொடுத்த என்னிடம் இப்போது இல்லாத ஆசிரியர்களை நான் நினைக்கிறேன், அவர்களை வணங்குகிறேன். தற்போது பணியில் இருந்து வரும் அனைத்து ஆசிரியர்களையும் நேசிக்கிறேன்.வணங்குகிறேன்.

அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது உள்ளம் கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

நன்றி 🙏

க.பொன் பலவேச ராஜ்

ஆசிரியர்

“கல்வி செய்திகள்”