தூத்துக்குடி மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பாக பள்ளி செல்லா மற்றும் இடை நின்ற குழந்தைகளை கண்டறியும் பணி சம்பந்தமான ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

தூத்துக்குடி மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பாக பள்ளி செல்லா மற்றும் இடை நின்ற குழந்தைகளை கண்டறியும் பணி சம்பந்தமான ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் :

தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி அலுவலகத்தில், பள்ளி செல்லா மற்றும் இடை நின்ற குழந்தைகளை கண்டறியும் பணி சம்பந்தமாக
ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று 07 – 08 – 2026 வெள்ளிக்கிழமை முதன்மை கல்வி அலுவலர் முனைவர். சங்கீதா சின்ன ராணி தலைமையில் நடைபெற்றது.கூட்டத்திற்கு
உதவி திட்ட அலுவலர் முருகன் முன்னிலை வகித்தார் .

இக்கூட்டத்தில் தலைமை ஏற்று முதன்மை கல்வி அலுவலர் பேசியதாவது,
30 நாட்களுக்கு மேல் பள்ளிக்கு செல்லாத மற்றும் இடை நின்ற மாணவர்கள் அனைவரையும் கண்டறிந்து உரிய செயலியில் இடைநின்ற காரணத்தினை பதிவேற்றம் செய்து, மாணவர்களை வயதிற்கு ஏற்ற வகுப்பில் பள்ளியில் சேர்க்கை செய்ய வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இடை நிற்றல் நிலை மாணவர்கள் எண்ணிக்கையை குறைக்கவும் இடை நிற்றல் நிலை பூஜ்ஜியம் என்ற நிலையை அடையவும் அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்கள் தங்களது பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.

மேலும் இக்கூட்டத்தில் UDISE படிவத்தில் பள்ளியில் உள்ள அனைத்து செயல்பாடுகளையும், உள்புற கட்டமைப்புகளையும் மாணவர்கள் ஆசிரியர்கள் அனைத்து விபரங்களையும் எண்ணிக்கையினை சரியாக பூர்த்தி செய்யப்பட வேண்டும் போன்ற விவரங்களை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கரோலின் ஜெசிமா குறிப்பிட்டார்.

மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை வயது ஏற்ற வகுப்பில் சேர்க்கை செய்து அவர்களுக்கு உரிய அனைத்து சலுகைகளையும் அவர்களின் விவரங்களை உரிய செயலியில் பதிவேற்றம் செய்யவும் அதற்குரிய வழிமுறைகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ செல்வி குறிப்பிட்டார்.

கணினி வழி கல்வி,இன்டர்நெட் செயல்பாடுகள் அனைத்து பள்ளிகளிலும் சிறப்பாக செயல்படுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணவேணி, ஆசிரியர் பயிற்றுநர் மோகனமுருகன் குறிப்பிட்டனர்.

கலைத் திருவிழா போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தில் பயில்கின்ற அனைத்து மாணவர்களும் கலந்து கொண்டு தங்களது கலைத்திறன்களை வெளிப்படுத்த வேண்டும் அனைத்து போட்டிகளிலும் பங்கு பெற வேண்டும் என்றும், பன்னிரண்டாம் வகுப்பு படித்த அனைத்து மாணவர்களும் உயர்கல்வியில் சேர்ந்து பயில வேண்டும். அதற்குரிய ஆலோசனைகளை உரிய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் ஆசிரியர் பயிற்றுநர்கள் எடுத்துக் கூறி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற முக்கியத்துவத்தை ஒருங்கிணைப்பாளர் சத்தியசீலன் குறிப்பிட்டார்.

எண்ணும் எழுத்தும் பயிற்சி அடிப்படை கல்வி திறன்களை மாணவர்களுக்கு செல்லும் வகையில் கற்றல் கற்பித்தல் திறன்கள் மேம்படுத்த வேண்டும்,அதற்குரிய நடவடிக்கைகளை ஆசிரியர் பயிற்றுநர்கள் பள்ளிக்கு செல்லும் பொழுது வழிகாட்டுதல் வேண்டும் போன்ற விவரங்களை ஒருங்கிணைப்பாளர் அனிதா குறிப்பிட்டார்.

பள்ளி செல்லா மற்றும் இடை நின்ற குழந்தைகளை மாணவர்களின் வீட்டுக்கு நேரடியாக சென்று இடை நின்றதற்கான காரணத்தை உரிய செயலியில் பதிவேற்றம் செய்யும் முறை பற்றியும் மாணவர்களை வயதுக்கேற்ற வகுப்பில் பள்ளியில் சேர்வது பற்றியும், 15 நாட்களுக்கு மேல் நீண்ட காலமாக வருகை புரியாத இடை நிற்க வாய்ப்புள்ள குழந்தைகளை மீளவும் பள்ளியில் சேர்க்கை செய்வதற்கு பிற துறைகளுடன் இணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றியும்

அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி வழங்குவது பற்றியும், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம் கருத்துக்களை வழங்கினார்.

இக்கூட்டத்தில் 46க்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.