தனியார் பள்ளிகளில் ஆர்.டி.இ.,சேர்க்கை இன்று ( ஏப்ரல் – 20 ) முதல் விண்ணப்பிக்கலாம்
கோவை: தனியார் பள்ளிகளில் ஆர்.டி.இ., 25 சதவீத ஒதுக்கீட்டிற்கான இலவச மாணவர் சேர்க்கைக்கு ஏப்ரல் 20 இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 ஆர்.டி.இ.யின் படி, தனியார் பள்ளிகளில் நலிவடைந்த பிரிவினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகிறது. இதில், எ.கே.ஜி., அல்லது ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்கள் எட்டாம் வகுப்பு வரை இலவசமாக படிக்கலாம்.
நடப்பாண்டு ஆர்.டி.இ., சேர்க்கைக்கு விண்ணப்ப பதிவு துவங்குகிறது. வரும் மே 18ம் தேதி மாலை 5.00 மணி வரை rte.tnschools.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
ஆ.டி.இ., மாணவர் சேர்க்கையில், 2022 ஆக.,1 முதல் 2023 ஜூலை 31க்குள் பிறந்தவர்களை எல்.கே.ஜி.,யிலும், 2019 ஆக.,1 முதல் 2020 ஜூலை 31க்குள் பிறந்தவர்களை முதல் வகுப்பிலும் சேர்க்கலாம். குழந்தை வசிக்கும் இடத்திலிருந்து சம்பந்தப்பட்ட பள்ளி ஒரு கி.மீ., சுற்றளவிற்குள் இருக்க வேண்டும் என்பது முக்கிய விதிமுறை. இதன்படி தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள 5 பள்ளிகள் வரை தேர்வு செய்யலாம்.
ஆவணங்கள் சரிபார்ப்பு ஏப் – 22 முதல் மே – 19 வரை நடைபெறும். தகுதியுள்ளவர்கள் அல்லது ஆவணங்கள் விடுபட்டவர்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கப்படும். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் ,தனியார் பள்ளிகள் மாவட்டக் கல்வி அலுவலகம், வட்டாரக் கல்வி அலுவலகங்களில் விண்ணப்பங்களை இணைய வழியில் விண்ணப்பிக்க தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.












