- தமிழக அரசின் “உலகம் உங்கள் கையில்” 10 இலட்சம் கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் :
தூத்துக்குடி பல்தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று அமைச்சர் கீதா ஜீவன் வழங்குகிறார்
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 5 ம் தேதி திங்கள்கிழமை மாலை 3 மணியளவில் கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் “உலகம் உங்கள் கையில்” என்னும் மாபெரும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..
“திராவிட மாடல் அரசு, மாணவர்களின் நலன் மற்றும் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு தமிழ்ப்புதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம், முதல் தலைமுறை பட்டமளிப்பு (FG) திட்டம், போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகைத் திட்டம், சமூக நீதி விடுதிகள் போன்ற பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டங்களின் தொடர்ச்சியாக, மாணவர்கள் நவீன உலகின் தேவைகளுக்கு ஏற்ப டிஜிட்டல் திறன் பெற “உலகம் உங்கள் கையில்” என்னும் அறிவூட்டும் கருப்பொருளின் கீழ் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்க்கு 20 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அந்த அறிவிப்பின்படி, இத்திட்டம் மாநிலம் முழுவதும் இரண்டு கட்டங்களாக நிறைவேற்றப்படுகிறது. முதல் கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா முதல்வர் தலைமையிலும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையிலும் கடந்த 5 ம் தேதி திங்கள்கிழமை மாலை 3 மணியளவில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மைய வளாகத்தில் நடைபெற்றது..
இந்நிகழ்ச்சியில் அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம், சட்டம், பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி, தொழில்துறைப் பயிற்சி போன்ற அனைத்துத் துறைகள் சார்ந்த மாணவர்களுக்கும் 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படும் திட்டம் செயல் பட தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தில் “கல்வி அனைவருக்கும்! உயர்வு ஒவ்வொருவருக்கும்!” என்ற நோக்கத்துடன் தொழில்நுட்ப அறிவியலை வலுப்படுத்த Dell, Acer, HP போன்ற உலகத் தரமான நிறுவனங்களின் மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன. மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த மடிக்கணினிகளில் Intel i3 / AMD Ryzen 3 Processor, 8 GB RAM, 256 GB SSD நினைவகம், Windows 11 Home Strategic மற்றும் BOSS Linux OS ஆகிய மென்பொருள்கள் முன்னதாக நிறுவப்பட்டுள்ள நிலையில், நடைமுறையில் உள்ள கல்வி மற்றும் திட்டப் பணிகளுக்காக MS Office 365, மேலும் “அறிவைத் தேடும் இளைய தலைமுறைக்குப் புதிய சாளரம்” என அமையும் செயற்கை நுண்ணறிவு மென்பொருளான Perplexity Pro–வின் ஆறு மாத சந்தாவும் கட்டணமில்லாமல் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாணவருக்கும் உயர்தர மடிக்கணினி பையும் வழங்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்தும் விதமாக மாவட்ட வாரியாக நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று ஜனவரி – 8 வியாழக்கிழமை தூத்துக்குடி மாவட்டத்தில்கல்வி பயிலும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்கான நிகழ்ச்சி தூத்துக்குடி அரசு பல்தொழில் நுட்பக் கல்லூரியில் ( பாலிடெக்னிக் ) காலை 10.00 மணிக்கு நடைபெற இருக்கிறது.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் இ. ஆ. ப. முன்னிலை வகித்து,சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமை தாங்கி கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க இருக்கிறார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முனைவர். முத்துராசு,கல்லூரி மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.












