10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள அக்டோபர் 6 முதல் 23 வரை அவகாசம்: பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள அக்டோபர் 6 முதல் 23 வரை அவகாசம்:
பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை

10 -ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். இதற்காக இந்த 2025 – 2026 ம் கல்வியாண்டுக்கான 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட இருக்கிறது.

இதற்காக அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ‘எமிஸ்’ ( EMIS – Educational Monitoring Infermation System ) தளத்தில் மாணவர்களின் விவரங்கள் சரியாக உள்ளதா? என்பதை பார்க்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது :

மாணவர்களின் பெயர், பிறந்ததேதி, புகைப்படம், பெற்றோர், பாதுகாவலர் பெயர் ஆகிய விவரங்களை சரிபார்த்து அதில் திருத்தங்கள் இருந்தால், அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை மேற்கொள்ள வேண்டும். மாணவரின் பெயர் பிறப்புச் சான்றிதழில் உள்ளவாறே இருக்க வேண்டும்.

அரசிதழில் ( Gazette ) பெயர் மாற்றம் செய்தவர்களுக்கு மட்டுமே அரசிதழின் நகலை பெற்று அதன் அடிப்படையில் பெயர் மாற்றம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

சமீபத்தில் எடுக்கப்பட்ட மாணவருடைய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை மட்டுமே பதிவேற்றம் செய்யவேண்டும். தேர்வு முடிவுகள் மாணவர்களின் பெற்றோர், பாதுகாவலர் செல்போன் எண்ணுக்கே குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என்பதால், பதிவேற்றம் செய்யப்படும் செல்போன் எண் சரியாக இருப்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும்.

தேர்வில் சலுகை பெற விரும்பும் மாற்றுத்திறனாளி தேர்வர்கள் தனித்துவ மாற்றுத்திறனாளி அடையாள அட்டை அல்லது மருத்துவக் குழுவால் வழங்கப்படும் மருத்துவ சான்றிதழை இணைத்து பதிவேற்றம் செய்யவேண்டும். பின்னர் சலுகை கோரி பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக பரிசீலிக்கப்படமாட்டாது.

மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய பின்னர் திருத்தங்கள் கோரி தேர்வுத்துறைக்கு அனுப்பக்கூடாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.