கல்விக் கடவுள் காமராஜர்

கல்விக் கடவுள் காமராஜர்

1903 ஆம் ஆண்டு ஜீலை 15-ஆம் நாள் தமிழ்நாட்டின் விருதுநகரில் குமாரசாமி நாடார் சிவகாமி அம்மாள் அவர்களுக்கு மகனாகப் பிறந்தார் காமராஜர், குடும்ப ஏழ்மையின் காரணமாகவும், படிப்பு ஏறாத காரணத்தினாலும் அவரால் ஆறு ஆண்டுகளில் கற்றலை முடித்துக் கொண்டார்.

12-ஆவது வயதில் தனது தாய்மாமனின் துணிக்கடையில் வேலை பார்த்தார்.

அப்போது காந்தி விடுத்த ஒத்துழையாமை இயக்க அழைப்பை ஏற்று தனது 16-ஆவது வயதில் அவர் காங்கிரஸ் கட்சியில் முழுநேர உறுப்பினராக சேர்ந்தார். அன்றிலிருந்து பல ஆண்டுகள் , பதவி, சொகுசு, வசதி என்று பாராமல் கட்சிக்காக கடுமையாக உழைத்தார்.

முதலமைச்சர் பதவி:

1930-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வேதாரண்யத்தில் நடந்த காந்தி அடிகளின் உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டார். அதனால் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.அந்த முதல் சிறை தண்டனைக்குப் பிறகு அவர் மேலும் 5 முறை சிறைவாசம் அனுபவித்தார். கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் அவர் சிறையிலேயே கழித்திருக்கிறார். 1940 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த பொறுப்பை 14 ஆண்டுகளுக்கு வகித்தார்.

1952-ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த 2 ஆண்டுகளில் சென்னை மாநிலத்தின் முதலமைச்சரானார்.

மிகவும் தயக்கத்தோடுதான் அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டாராம்.இந்தியாவில் ஆங்கிலம் தெரியாத ஒருவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரானது அதுவே முதன்முறை. ஆனால் ஆங்கிலம் தெரியாமலும் 6 ஆண்டுகளே கற்ற கல்வியுடனும் முதலமைச்சர் பொறுப்பேற்ற அவர்தான் அடுத்த 9 ஆண்டுகளுக்கு தலை சிறந்த தலமையை தமிழகத்திற்கு வழங்கினார். அவரது கால கட்டத்தில் இந்தியாவிலேயே மிகச்சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்ட மாநிலம் என்ற பெருமையை தமிழ்நாடு பெற்றது.

கல்விக்கு முக்கியத்துவம் :

காமராஜர் ஆட்சியில் கல்வித்துறையில் தமிழ்நாடு துரிதமான வளர்ச்சி கண்டது. மாநிலம் முழுவதும் பல புதிய பள்ளிகளை கட்ட உத்தரவிட்டார். பழைய பள்ளிகள் சீர் செய்யப்பட்ட ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு தொடக்கப்பள்ளி, ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் ஒரு உயர்நிலைப் பள்ளி இருப்பதை உறுதி செய்தார். எழுத்தறிவின்மையை போக்க வேண்டும் என்பதற்காக பதினோராம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வியை அறிமுகப்படுத்தினார். ஏழை சிறுவர்களின் வயிறு காயாமல் இருக்க மதிய உணவு வழங்கும் சிறப்பான திட்டத்தை அறிமுகம் செய்தார்.

ஜாதி வகுப்பு, ஏழை பணக்காரன் பாகுபாட்டை ஒழிக்க அவர் எல்லாப் பள்ளிப் பிள்ளைகளுக்கும் இலவச சீருடையை வழங்கினார்.

வேளாண்மையும் தொழிற்துறையும் 

காமராஜரின் ஆட்சியில் விவசாயம் நல்ல வளர்ச்சி கண்டது. வைகை அணை, மணிமுத்தாறு அணை, கீழ்பவானி அணை, பரமிக்குளம் சாத்தனூர் அணை என பல அணைக்கட்டு திட்டங்கள் அசுர வேகத்தில் நிறைவேற்றப்பட்டன. தொழிற்துறையிலும் முத்திரை பதித்தார் காமராஜர். நெய்வேலி பழுப்பு நிலக்கரி சென்னை ஆவடி ராணுவ தளவாட தொழிற்சாலை சென்னை ஹிந்துஸ்தான் டெலி பிரிண்டர்ஸ் என பல பெரியது தொழிற்சாலைகள் தமிழகத்தில் உருவான. அவரது மாட்சிமை பொருந்திய ஆட்சியைக் கண்டு இந்திய பிரதமர் நேரு இந்தியாவிலேயே மிகச்சிறந்த முறையில் நிர்வகிக்கப்படும் மாநிலம் தமிழ்நாடு என்று பாராட்டினார்.

இப்படிப்பட்ட சிறந்த நல்லாட்சியை வழங்கியதால்தான் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அரசியலுக்கு புதிய இலக்கணத்தை கற்றுத் தந்தார் :
காங்கிரஸ் கட்சி அதன் வலிமையும் இழந்து வருவதை உணர்ந்த காமராஜர் எல்லா மூத்த காங்கிரஸ் தலைவர்களும் தங்கள் அரசியல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டு நலனுக்காக கட்சிப்பணிகளில் ஈடுபட வேண்டும் என்ற ஒரு திட்டத்தை உருவாக்க பிரதமர் நேருவிடம் பரிந்துரை செய்தார்.

காமராஜர் திட்டம் :

இரண்டே மாதங்களில் அந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டது காங்கிரஸ் மேலிடம். அந்தத் திட்டத்திற்கு ‘காமராஜர் திட்டம்’ என்றே பெயரிடப்பட்டது. தனது திட்டத்திற்கு முன் உதாரணமாக இருக்க 1963-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ந்தேதி தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் காமராஜர்.

அவரைத் தொடர்ந்து லால் பகதூர் சாஸ்திரி, ஜெகஜீவன்ராம், மொராஜி தேசாய், எஸ்கே.பட்டேல் போன்ற மூத்த தலைவர்களும் பதவி விலகினர். அதே ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை தந்தார் ஜவகர்லால் நேரு, அதற்கு அடுத்த ஆண்டே நேரு இறந்ததைத் தொடர்ந்து இந்தியாவின் அடுத்த பிரதமராக லால் பகதூர் சாஸ்திரியை முன் மொழிந்தார் காமராஜர்.

இரண்டே ஆண்டுகளில் சாஸ்திரியும் மரணத்தைத் தழுவிய போது 48 வயது நிரம்பியிருந்த நேருவின் மகள் இந்திராகாந்தியை இந்தியாவின் அடுத்த பிரதமராக்கினார் காமராஜர். அந்த இரண்டு தலமைத்துவ மாற்றங்களையும் அவர் மிக லாவகமாக செய்து முடித்ததால் காமராஜரை ‘கிங்மேக்கர்’ என்று அழைத்தனர் பத்திரிக்கையாளர்களும், அரசியல்வாதிகளும்.

தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சியை தந்த காமராஜர் தனது கடைசி மூச்சு வரை சமூகத்தொண்டு செய்வதிலேயே குறியாக இருந்தார்.

1975-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் நாள் தனது 72-ஆவது வயதில் காலமானார்.