பள்ளி வகுப்புகளில் இனி கடைசி பெஞ்ச் கிடையாது அறிவிப்பு நிறுத்தி வைப்பு :
“ப” வரிசைக்கு “யூ ” டர்ன் போட்ட பள்ளிக் கல்வித்துறை
பள்ளிகளில் வகுப்புகளில் மாணவர்கள் அமரும் பெஞ்சுகள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக போடப்பட்டு அதில் மாணவர்கள் வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக அமர்ந்திருப்பது வழக்கம்.
இனி இந்த நிலையின் அமைப்பை மாற்றி அமைக்க பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். குறிப்பாக தற்போதைய வகுப்பறை அமைப்பின் மூலம் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை மாணவர்களால் சரிவர கவனிக்க முடியாத சூழல் இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.எனவே கற்பித்தவில் கவனச் சிதறலை தவிர்ப்பதற்காக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் வகுப்பறை இருக்கைகள் “ப” வடிவில் அமைக்க பள்ளி கல்வித்துறை இயக்குனர் அறிவித்துள்ளார்.
அனைத்து வகை பள்ளிகளிலும் வாய்ப்புள்ள வகுப்பு அறைகளை “ப” வடிவில் மாற்றி அமைக்க வேண்டும் என்றும்,இதன் மூலம் கற்றலில் மாணவர்களின் ஆர்வம் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசு பள்ளியில் வகுப்புகளின் அளவுகள் சிறியதாகவே இருக்கும்..” ப” வடிவில் மாணவர்கள் அமர மாற்றி அமைத்தால் அதிகபட்சமாக ஒரு “ப” வரிசையில் 15 முதல் 20 மாணவர்கள் அமரலாம்.. இது மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளில்( கிராமத்தில்) நடை முறைப்படுத்த முடியும்.

மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள வகுப்பில் “ப” வடிவில் இருக்கை அமைக்க சிரமம்.. துவக்கப் பள்ளியில் சாத்தியம் இருந்தாலும் வகுப்பின் அளவு சிறியதாக இருக்கும்.
அரசுப் பள்ளிகளில் சாத்தியம் இல்லாத போது,அரசு உதவபெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தினால் கண்டிப்பாக வாய்ப்பில்லை.
“ப” வடிவ இருக்கை மாணவர்களுக்கு கற்றல் திறன் அதிகரிக்கும் என்றால் ஒரு வகுப்பில் அதிகபட்சமாக 20 மாணவர்கள் தான் இருக்க வேண்டும் என்ற விதியை கொண்டு வர வேண்டும்.. இது சாத்தியம் இல்லை. ஏனென்றால் ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வாய்ப்பில்லை.
மேலும் பக்கவாட்டில் இருக்கும் மாணவர்களுக்கு கரும்பலகையை பார்ப்பதில் சிரமமும், ஒரு பக்கமாக திரும்பிப் பார்ப்பதனால் கழுத்து வலியும் ஏற்படும் என்றும், மேலும் ஆசிரியர்கள் வலது, இடதுபுறமாக திரும்பி பார்ப்பதனால் கழுத்து, தோள்பட்டை வலி ஏற்படும் என்றும், வகுப்பு அறையின் அளவு போதிய அளவில் என்று சமூக ஊடகங்களில் செய்திகள் பலவகையான விமர்சனங்களை பெற்றது.
ஒரு தரப்பினரிடையே வரவேற்பை பெற்றாலும், இன்னொரு தரப்பினர் இந்த முடிவை குறை கூறினர்.
இதையடுத்து, உத்தரவு பிறப்பித்த அதே நாளிலேயே ‘ப’ வடிவில் மாற்றி அமைக்கும் திட்டத்தை நிறுத்தி வைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. வல்லுனர்களிடம் உரிய ஆலோசனை பெறும் வரை திட்டத்தை நிறுத்தி வைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் இது தொடர்பான முடிவு அறிவிக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
காலரி சிஸ்டம் அமைக்க கோரிக்கை :
எனவே மாணவர்களின் கற்றல் திறன் அதிகரிக்கவும், கற்றலில் கவனக் குறைவு ஏற்படாமல் இருக்கவும், மேலும் ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களின் செயல் பாட்டை கவனிக்க( குறிப்பாக கடைசி மாப்பிள்ளை பெஞ்ச் ) மாணவர்களை ஒன்றன் பின் ஒன்றாக உயரமாக அமரும் காலரி ( Gallery ) முறையை நடைமுறைப் படுத்துவது தான் அனைத்து வகை பள்ளி வகுப்புகளுக்கும் சாத்தியமாகும் என்று கல்விச் செய்திகள் டாட் காம் அரசுக்கு கோரிக்கை வைக்கிறது.
நிறைவேற்றுமா தமிழக அரசு.












