இன்று ஜீன் 1,உலக பால் நாள் (World Milk Day)
உலக பால் நாள் என்பது ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பினால் உலகளாவிய உணவாக பாலின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்வதற்காகக் கடைபிடிக்கப்படும் ஒரு நாளாகும்.
உலக பால் நாள் 2001 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 1ஆம் தேதியன்று கடைபிடிக்கப்படுகிறது. இது பால் பண்ணையுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்குக் கவனம் செலுத்துவதற்கான ஒரு வாய்ப்பை வழங்கும் நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளது. பால் ஒரு உலகளாவிய உணவு என்பதை உணர்ந்து கொள்ள இதே நாளில் பல நாடுகளில் தனிப்பட்ட மற்றும் தேசிய விழாக்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் தரப்படுகிறது.
2016 ஆம் ஆண்டில், உலக பால் தினம் நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் கொண்டாடப்பட்டது.
பாலின் முக்கியத்துவம்:
பசுவின் பாலில் சுமார் 87 சதவீதம் தண்ணீரும் 13 சதவீதம் திடப்பொருட்களும் கொண்டது. பாலின் கொழுப்புப் பகுதியில் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் உள்ளன. கொழுப்பைத் தவிர மற்ற திடப்பொருட்களில் புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள், நீரில் கரையக்கூடிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அடங்கும். பாலில் உள்ள இந்த ஊட்டச்சத்துக்கள் அதை இயற்கையின் மிகவும் சரியான உணவாக மாற்றுகின்றது.
பால் பொருட்களில் உயர்தர புரதங்கள் உள்ளன. பாலில் உள்ள புரத உள்ளடக்கத்தில் மோர் புரதங்கள் சுமார் 18 சதவீதம் ஆகும். பாலில் மட்டுமே காணப்படும் கேசீன் என்ற புரதம், அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்களையும் கொண்டுள்ளது. இது பாலில் உள்ள மொத்த புரதங்களில் 82 சதவீதத்தைக் கொண்டுள்ளது.
உடல் திசுக்களை உருவாக்கவும் சரிசெய்யவும், இரத்தத்தில் தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும் ஆன்டியாடிகளை உருவாக்கவும் புரதம் தேவைப்படுகிறது.
பாலில் கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்ட சத்துக்கள் உள்ளன.பாலில் காணப்படும் கால்சியம் உடலால் எளிதில் உறிஞ்சப்படுகிறது.
பால் ஆரோக்கியமான சருமம் மற்றும் கண்களை மேம்படுத்த உதவும் ரிபோஃப்ளேவின் (வைட்டமின் பி2) இன் குறிப்பிடத்தக்க மூலமாகும், அத்துடன் வைட்டமின்கள் ஏ மற்றும் டி ஆகியவையும் உள்ளன.












