கல்லூரிகள் ராகிங் எதிரான செயல் திட்டங்களை சமர்ப்பிக்க வேண்டும்: யுஜிசி அறிவுறுத்தல்

கல்லூரிகள் ராகிங் எதிரான செயல் திட்டங்களை சமர்ப்பிக்க வேண்டும்:
யுஜிசி அறிவுறுத்தல்

12 ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவந்து மாணவர்கள் உயர் கல்வியில் சேர கல்லூரிகளுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.மே 27 அன்று ஆன்லைனில் விண்ணப்பிக்கும் அவகாசம் முடிந்தது.அரசு கலை – அறிவியல் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு படிப்பிற்கு இதுவரை 2,25,705 பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர்.

இதற்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகும் சூழலில் மே 27 க்குள் விண்ணப்பிக்க தவறியவர்கள் மற்றும் துணைத்தேர்வு எழுதும் மாணவர்கள் பயன் பெறும் வகையில் ஆன்லைனில் விண்ணப்பங்களை இன்று முதல் பதிவு செய்யலாம் என அறிவிப்பு வெளியாகி இருந்தது.

பொதுப்பிரிவினர்க்கான கலந்தாய்வு ஜீன் 4 ல் தொடங்கி ஜீன் 14 வரை நடைபெற இருக்கிறது. அதனை தொடர்ந்து இளங்கலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் ஜீன் 30 ம் தேதி துவங்க இருக்கிறது.

இந்நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கும் கால அவகாசம் முடிந்து
ராகிங் தடுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட செயல் திட்டங்கள், கண்காணிப்பு பணிகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து விதமான உயர்கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ராகிங்கை தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கெனவே வகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. அதில் சட்ட வழிகாட்டு குழுவின் ஆதரவைப் பெறுதல், கல்வி நிறுவனங்களின் பொறுப்புணர்வு, திடீர் ஆய்வுகள் குறித்த பல்வேறு நெறிமுறைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றை முழுமையாக பின்பற்றி கல்லூரிகள், விடுதிகளில் ராகிங் இல்லாத சூழலை உருவாக்க வேண்டும்.

கண்காணிப்பு:

இதற்காக நியமிக்கப்பட்ட பேராசிரியர் குழுவினர்கள் கல்லூரி வளாகங்களில் கண்காணிப்பு பணிகளை தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும்.முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும்.

விழிப்புணர்வு:

மாணவர்களுக்கு ராகிங் சம்பந்தமான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். மாணவர்கள் மத்தியில் ராகிங் எதிர்வினைகள் குறித்து போதியளவில் விழிப்புணர்வு உண்டாக்க தேவையான செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

உயர்கல்வி நிறுவனங்கள் ராகிங் விஷயத்தில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது அவசியம். மேலும் ராகிங் தொடர்பாக எந்தவொரு மாணவரும் பாதிக்கப்படாதவாறு கட்டுப்பாடுகளை வலுப்படுத்த வேண்டும்.

புகார் நடவடிக்கை :

ராகிங் தொடர்பாக மாணவர்களிடம் பெறப்படும் புகார்கள், அதுகுறித்து உண்மை நிலை அறிந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து யுஜிசி தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அந்த சுற்றரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.