கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நுண்ணுயிரியல் துறை சார்பில் சர்வதேச கருத்தரங்கு மற்றும் கல்லூரிகளுக்கு இடையிலான போட்டிகள் நடைபெற்றது !
கோவில்பட்டி கே.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நுண்ணுயிரியல் துறை சார்பாக சர்வதேச அளவிலான இரண்டு நாட்கள் கருத்தரங்கு மற்றும் கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகள் “மைக்ரோபெஸ்ட் 2026 நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை கல்லூரியின் முதல்வர் முன்னிலை வகித்து துவங்கி வைத்தார். இத்துறையின் தலைவர் வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மலேசியா நாட்டில் உள்ள மலாயா பல்கலைக்கழகத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகள் துறையின் விரிவுரையாளர் முனைவர்.சர்மிளா முத்துகிருஷ்ணன் இணையம் வாயிலாக கலந்து கொண்டு “பாதுகாப்பான மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பி இல்லாத உணவு முறைக்காக மீன்வளர்ப்பில் நுண்ணுயிர் சமூக மேலாண்மை பயன்பாடுகள்” என்ற தலைப்பில் மாணவர்களிடையே கருத்துரையாற்றினார்.
இதனை தொடர்ந்து இத்துறையின் முன்னாள் மாணவியும் எட்டயபுரம் மூர்த்தி அக்ரோ டிரேடர்ஸின் மேலாண்மை இயக்குனருமான திலகம் ( 2001 – 2004 ) கலந்து கொண்டு நுண்ணுயிரியல் துறையின் சமூக மேலாண்மை குறித்து சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் மாணவர்களுக்கு கருத்தரங்கின் கருப்பொருள் சார்ந்து பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இதில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை விருதுநகர் இந்து நாடார்கள் செந்தில்குமார நாடார் ( V.H.N.S.N College ) கல்லூரி அணியினரும் இரண்டாம் இடத்தை சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி அணியினரும் பெற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் பங்கு பெற்றவர்களுக்கு சான்றிதழ்களையும் கல்லூரி முதல்வர் வழங்கினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கே.ஆர். கல்வி நிறுவனங்களின் இயக்குனர் வழிகாட்டுதலின் படி நுண்ணுயிரியல் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.












