தூத்துக்குடி சி.வ.அரசு தொடக்கப் பள்ளியில் உலக எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு புதிய பாரத எழுத்தறிவு திட்டம் விழிப்புணர்வு பேரணி : வட்டாரக் கல்வி அலுவலர் சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது !

தூத்துக்குடி சி.வ.அரசு தொடக்கப் பள்ளியில் உலக எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு புதிய பாரத எழுத்தறிவு திட்டம் விழிப்புணர்வு பேரணி :
வட்டாரக் கல்வி அலுவலர் சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது !

உலக எழுத்தறிவு தினம் (International Literacy Day) ஆண்டுதோறும் செப்டம்பர் 8 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

1966-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் (UNESCO) செப்டம்பர் 8-ம் தேதியை சர்வதேச எழுத்தறிவு நாளாக அறிவித்தது.

கல்வி மற்றும் எழுத்தறிவின் முக்கியத்துவத்தை உலக மக்களுக்கு உணர்த்துவதும், எழுத்தறிவின்மையை போக்குவதும் இதன் முக்கிய நோக்கமாகும்.

உலக எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி நகர்ப்புற ஒன்றியம் சி.வ.அரசு தொடக்கப் பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவு திட்த்தின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது .

நிகழ்ச்சிக்கு வட்டாரக் கல்வி அலுவலர் சரஸ்வதி தலைமை மற்றும் தூத்துக்குடி நகர்ப்புற வட்டார வளமைய‌ மேற்பார்வையாளர் ( பொறுப்பு) வனிதா முன்னிலையில் நடைபெற்ற இப்பேரணியில் பள்ளித் தலைமை ஆசிரியர் ஜுலியா பர்ணான்டோ,வட்டார ஒருங்கிணைப்பாளர் கணபதி மற்றும் தன்னார்வாளர் மேக்டலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

இன்று தூத்துக்குடி சி.வ.அரசு தொடக்கப்பள்ளியில் இருந்து 5 ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும்
மாணவர்கள் உட்பட 97 பேர்கள் கலந்து கொண்ட இப்பேரணி பள்ளியில் இருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து பள்ளியை வந்தடைந்தது.

பேரணியில் “கல்வியே அழியாச் செல்வம்,கற்றவரே முகத்தில் கண் உடையவர்” ,”பத்து தலைமுறை ஏழ்மையை ஒரே தலைமுறையில் மாற்றும் வலிமையான ஒரே ஆயுதம் கல்வி”, “கல்லாமை இல்லாமை ஆக்குவோம்,கல்விக்கு கை கொடுப்போம் ” என்ற பதாகைகளை ஏந்தி‌ மாணவர்கள் கல்வியின் முக்கியத்துவத்தை பறைசாற்றினர்.

முன்னதாக உலக எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.