பொறியியல் படிப்புக்கு 3 லட்சம் பேர் விண்ணப்பம்:
ஜூன் – 29-ல் தரவரிசைப் பட்டியல்!
பொறியியல் படிப்பில் சேர 3 லட்சத்து ஆயிரத்து 509 மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். தரவரிசைப் பட்டியல் ஜூன் 29-ம் தேதி வெளியிடப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள பொறியில் கல்லூரிகளில் இந்த ஆண்டு பிஇ, பிடெக் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு மே 3-ம் தேதி தொடங்கியது. முதல் நாளன்றே 8,505 பேர் விண்ணப்பித்தனர்.

விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஜூன் 2-ம் தேதி முடிவடைய இருந்த நிலையில், கடைசி தேதி ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டது. அதன்படி பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது.
நேற்று மாலை 6 .00 மணி நிலவரப்படி, 3,01,519 பேர் ஆன்லைனில் விண்ணப்பித்திருப்பதாகவும் அவர்களில் 2 ,43,476 பேர் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தியுள்ளதாகவும், 2,23,599 பேர் தேவையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளதாகவும் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.

ஆன்லைனில் விண்ணப்பித்த மாணவர்கள், சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்ய இன்று 06 – 06 – 2026 (சனிக்கிழமை) வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் ஜூன் 29-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. விரும்பும் கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு தொடங்கும் தேதி அன்றைய தினம் அறிவிக்கப்படுகிறது.












