தூத்துக்குடி வ.உ.சி.கல்வியியல் கல்லூரியில் “Creative Bazaar – 2026” ‘விற்பனை திருவிழா’
தூத்துக்குடி வ.உ.சி.கல்வியியல் கல்லூரியில் 27.03.2026 வெள்ளியன்று காலை 09.30 மணிமுதல் மதியம் 01.30 மணிவரை மாணவர்களின் தொழில் முனைவோர் திறனை ஊக்குவிக்கும் வகையில் “Creative Bazaar – 2026” என்னும் தலைப்பில் ‘விற்பனை திருவிழா’ நடைபெற்றது.

இந்நிகழ்வினை நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளரரும் கல்லூரி நூலகருமான முனைவர்.விஜயலக்ஷ்மி, பொருளறிவியல் துறை பேராசிரியர் கவிதா மற்றும் உள்தரும் மதிப்பீட்டு குழு வின் ஒருங்கிணைப்பாளரும் பொருளறிவியல் துறை பேராசிரியருமான முனைவர்.குரு வாசுகி ஆகியோர் இணைந்து முதல்வரின் வழிகாட்டுதலின்படி ஏற்பாடுகளை செய்தனர்.
இந்நிகழ்வின்மாணவ ஒருங்கிணைப்பாளராக இரண்டாம் ஆண்டு மாணவர்கள் சினேகா மற்றும் பெலிவினா, முதலாம் ஆண்டு மாணவர்கள் ஐஸ்வரியா மற்றும் தாம் மினோலின் ஆகியோர் செயல்பட்டனர்.

நிகழ்வின் தொடக்கமாக கல்லூரி முதல்வர் முனைவர்.கனகராஜ் விழாவினை தொடங்கிவைத்தார். இந்த நிகழ்வின் முக்கிய நோக்கம் மாணவர்களுக்கு புத்தக அறிவைத் தாண்டி நேரடி வணிக அனுபவத்தையும் சந்தைப்படுத்துதல் நுணுக்கங்களையும் வழங்குவதாகும்.
கல்லூரி வளாகம் முழுவதும் மொத்தம் 17 விற்பனை அங்காடிகள் அமைக்கப்பட்டன. இதில் மாணவர்கள் தாங்களாகவே தயாரித்த வீட்டு பலகாரங்கள், கைவினைப் பொருட்கள், ஓவியங்கள், நவீன அணிகலன்கள் மற்றும் குளிர்பானங்கள் போன்றவற்றை விற்பனை செய்தனர்.

பேராசிரியர்கள் மற்றும் சக மாணவர்களின் பேராதரவுடன் விற்பனை விழா நடைபெற்றது. வாடிக்கையாளர்களைக் கையாளுதல், குழுப்பணி மற்றும் நிதி மேலாண்மை போன்ற மிக முக்கியமான வாழ்க்கை அனுபவங்கள் பற்றியும் படைப்பாற்றலையும் வணிகத் திறனையும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் விதமாகவும், இவ்விற்பனைத் திருவிழா அமைந்தது.













