சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒரு கோடி பனை விதைகளை விதைக்கும் மதர் சமூக சேவை நிறுவனத்திற்கு பாராட்டு சான்றிதழ் :
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் வழங்கினார்
தமிழகத்தில் முதன் முதலில் ஒரு கோடி பனை மரங்களை வளர்க்க வேண்டும் என திட்டமிட்டு தொடர்ந்து பனை விதைகளை விதைத்து வரும் தூத்துக்குடி மதர் சமூக சேவை நிறுவனத்தின் சேவையை பாராட்டி பாராட்டு சான்றிதழ் மற்றும் பாராட்டு பரிசினையும் அதன் இயக்குனர் டாக்டர். கென்னடியிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் இ.ஆ.ப. வழங்கி பாராட்டினார்.

தமிழர்களின் தேசிய மரமாக கருதப்படும் பனைமரம் தூத்துக்குடி மாவட்டத்தில் 5 கோடிக்கும் மேற்பட்ட பனை மரங்கள் இருந்துள்ளது. ஆனால் அவைகள் செங்கல் சூளைகளுக்காகவும், விறகிற்காகவும் மேலும் பல்வேறு காரணங்களுக்கா வெட்டி அளிக்கப்பட்டுள்ளது . தற்போது சுமார் ஒரு கோடிக்கும் குறைவான பனை மரங்கள் மட்டுமே உள்ளன. இதனால் கடற்கரையில் மண்ணரிப்பு, புயல், சூறாவளி போன்ற பல்வேறு இயற்கை சீற்றங்கள் ஏற்படுகிறது. இயற்கை சீற்றங்களினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.
இயற்கையை பாதிக்கக்கூடிய சீற்றங்களை தடுக்க வேண்டும், இயற்கையை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும். பாரம்பரியத்தை போற்றி பாதுகாக்க வேண்டும் என்பதற்காக மதர் சமூக சேவை நிறுவனம் ஒரு கோடி பனை மரங்களை வளர்க்க வேண்டும் என்ற உன்னதமான குறிக்கோளோடு, சேவை மனப்பான்மையோடு, சமூக அக்கறையோடு , எந்தவிதமான எதிர்பார்ப்பும் இன்றி தமிழகத்தில் முதன் முதலில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 8 ஆண்டுகளாக நீர் நிலைகளை பாதுகாக்க, மழைக்காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதங்கள் ஏற்படுவதை தடுக்க தாமிரபரணி ஆற்றங்கரை உட்பட நீர்நிலைகளின் கரைகள் உடையாமல் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக ஆற்றங்கரை, குளத்தாங்கரை, வாய்க்காங்கரை, போன்ற நீர் நிலைகளிலும், புயல், சூறாவளி, பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்கள் தடுக்க கடற்கரை ஓரங்களிலும், சாலை ஓரங்களிலும், நிலத்தடி நீரை மேம்படுத்த அரசு புறம்போக்கு இடங்களிலும், தொடர்ந்து ஒரு கோடி பனை மர விதைகளை விதைத்து வருகிறார்கள்.

தற்போது வரை சுமார் 76 லட்சம் பனைமர விதைகளை விதைத்துள்ளார்கள். சில இடங்களில் விதைக்கப்பட்டு வளர்ந்து வரும் பனைமர கன்றுகளை (வடலி) பராமரித்து வருகிறார்கள். மேலும் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகளுக்கும், மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கும், இளைஞர் மன்றங்களை சார்ந்த இளைஞர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும், பொதுமக்களுக்கும் பனை பாதுகாப்பு மற்றும் பனைப் பொருட்களின் மகத்துவம் மற்றும் மருத்துவ குணங்கள் பற்றிய விழிப்புணர்வு முகாம், கருத்தரங்கு, கூட்டங்கள், மாநாடுகளை நடத்தி தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் புதிய , புதிய அமைப்புகளை உருவாக்கி பலரும் பனை விதைகளை வைத்து வருகிறார்கள். மதர் சமூக சேவை நிறுவனத்தின் விழிப்புணர்வால் தமிழகத்தில் மக்களிடத்தில் மிகப்பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டு மக்களிடத்தில்பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது.

மேலும் இந்த தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், மற்றும் வனத்துறை, பசுமை தமிழ்நாடு இயக்கம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் கடந்த 2025-2026 ஒரு ஆண்டில் ஆண்டில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம், கடம்பா குளம் மறுகால் ஓடை, கடற்கரைப் பகுதிகளிலும் , குளம் ஏரி போன்ற நீர் நீர் நிலைகளின் கரையோரங்களில் 5,00,000 பனை மர விதைகள் விதைக்கப்பட்டுள்ளது.
இச் சேவையை அங்கீகரித்து ஊக்கப்படுத்தும் விதமாக சான்றிதழ் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. மாவட்ட வன அலுவலர் இளையராஜா தலைமை தாங்கினார். மாவட்ட உதவி வன அலுவலர் முனியப்பன் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் இ.ஆ.ப. ,மதர் சமூக சேவை நிறுவனத்தின் சேவையை பாராட்டி இயக்குனர் டாக்டர். கென்னடியிடம் பாராட்டு சான்றிதழையும், பரிசினையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், உதவி ஆட்சியர் (பயிற்சி) புவனேஷ் ராம், துணை ஆட்சியர் (பயிற்சி) மகேந்திரன் லீடு டிரஸ்ட் இயக்குனர் பானுமதி உட்பட பல அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்












