டெட் தேர்வர்கள் கவனத்திற்கு: ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்ய மாற்று ஏற்பாடு – டி.ஆர்.பி. அறிவிப்பு
டெட் தேர்வர்கள் ஹால் டிக்கெட் பதிவிறக்கச் சிக்கலைச் சரிசெய்ய கோரிக்கை விடுத்த நிலையில், https://trb.tn.gov.in என்ற இணையதளத்தில் நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றத் தேவைப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (Teacher Eligibility Test – TET) நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள நிலையில், ஹால் டிக்கெட் பதிவிறக்கத்தில் சிக்கல் ஏற்பட்ட தேர்வர்களுக்காக ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மாற்று ஏற்பாடுகளை அறிவித்துள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டு, செப்.10-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன்படி, தாள்-1 தேர்வு வரும் நவம்பர் 15-ஆம் தேதியும் (வெள்ளிக்கிழமை), தாள்-2 தேர்வு நவம்பர் 16-ஆம் தேதியும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளன.
தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து தங்களது ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தனர். இருப்பினும், பல தேர்வர்கள் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்கள் இருப்பதாகப் புகார் தெரிவித்தனர். குறிப்பாக, விண்ணப்பிக்கும்போது பயன்படுத்திய Application ID, Password மறந்துவிட்டதாலும், கடவுச்சொல்லை மாற்ற முயற்சிக்கும்போது பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு ஓ.டி.பி. (OTP) வந்து சேராததாலும் பல தேர்வர்கள் ஹால் டிக்கெட் எடுக்க முடியாமல் திணறினர். இது தொடர்பாக அவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கும் புகார்களை அனுப்பியிருந்தனர்.

செவி சாய்த்த ஆசிரியர் தேர்வு வாரியம் :
தேர்வர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து, ஆசிரியர் தேர்வு வாரியம் செவி சாய்த்து தற்போது ஒரு செய்தி அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
தேர்வர்கள் https://trb.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று தங்களது தேர்வுக் கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












