1ம் வகுப்பில் மாணவர்கள் சேர்க்கையில் அரசுப் பள்ளிகளை பின்னுக்குத் தள்ளி தனியார் பள்ளிகள் முதலிடம் : காரணம் என்ன? ஒரு சிறப்புப் பார்வை :

1ம் வகுப்பில் மாணவர்கள் சேர்க்கையில் அரசுப் பள்ளிகளை பின்னுக்குத் தள்ளி தனியார் பள்ளிகள் முதலிடம் :
காரணம் என்ன?
ஒரு சிறப்புப் பார்வை :

நடப்பு கல்வியாண்டில், ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கையில், 5.26 லட்சம் பேருடன் அரசுப் பள்ளிகளை பின்னுக்குத் தள்ளி தனியார் பள்ளிகள் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், 2.39 லட்சம் மாணவர்களுடன் அரசுப் பள்ளிகள் பின்தங்கி உள்ளன.

தமிழகத்தில், 58,924 அரசு, தனியார் பள்ளிகளில், 1.21 கோடி மாணவ – மாணவியர் படிக்கின்றனர். ஆண்டுதோறும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிந்து வருகிறது.

அதிலும், பள்ளி சேர்க்கைக்கு அடித்தளமான, ஒன்றாம் வகுப்பு சேர்க்கையில் நடப்பு கல்வியாண்டில், 37,595 அரசு பள்ளிகளில், 2 லட்சத்து, 39,290 பேரும்,

8,335 அரசு உதவி பெறும் பள்ளிகளில், 86,063 பேரும்,

12,929 தனியார் பள்ளிகளில், 5 லட்சத்து, 26,052 பேரும் சேர்ந்துள்ளனர்.

இதில், அரசு பள்ளிகளை விட, தனியார் பள்ளிகளில், 2 லட் சத்து, 86,762 மாணவ – மாணவியர் கூடுதலாக சேர்ந்துள்ளனர்.

அரசுப் பள்ளி சேர்க்கையில் அரசு உதவி பெறும் பள்ளிகளின் சேர்க்கை எண்ணிக்கையை சேர்த்தால் கூட, தனியார் பள்ளிகள் சேர்க்கையில் 2 லட்சத்து, 699 மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர்.

அரசுப் பள்ளிகளை விட, தனியார் பள்ளிகள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து கல்வியாளர்கள் கூறியதாவது:

அரசுப் பள்ளி என்பது வறுமையின் அடையாளமல்ல; பெருமையின் அடையாளம் என பள்ளிக்கல்வி துறை கூறி வருகிறது. அரசு பள்ளிகளின் நிலை, உண்மையிலேயே பெருமிதம் தரும் வகையில் இருக்கிறதா என்பது கேள்வியாகியிருக்கிறது.

கட்டமைப்பு தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடங்கள் அரசு நிதி உதவியுடன் மாணவர்களுக்கு ஒதுக்கப்படுவதால், அரசு பள்ளிகளில் சேர்க்கை குறைவதாக விமர்சனங்கள் உண்டு. அதே நேரம், தனியார் பள்ளிகளில் சேர்க்கை குறையவில்லை. தகுதி தேர்வு மூலம், அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இதுபோன்ற நடைமுறை இல்லாதபோதும், தனியார் பள்ளிகளில் நம்பிக்கையுடன் மாணவர்களை சேர்க்கின்றனர்.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, எல்.கே.ஜி., – யு.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்பட்டன. ஆட்சி மாற்றத்திற்கு பின், கண்டுகொள்ளாமல் விட்டு விட்டனர்.

தனியார் பள்ளிகளுக்கு நிகரான கட்டமைப்பு வசதிகளை அரசு பள்ளிகளில் ஏற்படுத்தி தந்தாலே, மாணவர்களின் எண்ணிக்கையை தக்கவைத்துக் கொள்ள முடியும்.என்று கூறினார்.

ஆசிரியரின் சிறப்புப் பார்வை :

அரசுப் பள்ளிகளில் அதுவும் தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்பு இல்லை..

தற்போது அரசுப் பள்ளிகளில் ஒரு ஆசிரியர் ஒரே நேரத்தில் இரண்டு வகுப்புகளை கையாளும் சூழ்நிலை தான் உள்ளது. ஏன் இது அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் நிகழ்கிறது.

ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதும் இல்லை, இதில் என்ன வேடிக்கை என்றால் சேர்க்கை குறைவாக உள்ளது என்று சேர்க்கை குறைவாக உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களை சேர்க்கை அதிகமாக உள்ள பள்ளிக்கு பணிநிரவல் ( Deployment ) என்று இடம் மாற்றுகிறார்கள்.

இதன் காரணமாக சேர்க்கை குறைவாக உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் 2 அல்லது 3 வகுப்புகளை கையாளும் சூழல் ஏற்படுகிறது.

இதற்கு காரணம் 1 முதல் 3 ம் வகுப்பு வரை ஒரே பாடத்திட்டம் ( எண்ணும் எழுத்தும் ) 4 மற்றும் 5 ம் வகுப்புகளுக்கு ஒரே பாடத்திட்டம்.இதன் காரணமாகவே 8 ம் வகுப்பு வரை அனைவரையும் ஆல்பாஸ் செய்கிறார்கள்.

இப்படி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒரே பாடத்திட்டம் இருப்பதும் சேர்க்கை குறைவிற்கு காரணமாகும்.இது மாணவர்களின் வயதிற்கேற்ற கல்வி தரத்தை குறைக்கிறது.

பணி நிரவல் என்று சேர்க்கை குறைவாக உள்ள பள்ளியில் இருந்து சேர்க்கை அதிகமாக உள்ள பள்ளிக்கு ஆசிரியர்களை மாற்றும் அரசு அதனை கைவிட்டு சேர்க்கை அதிகமாக உள்ள பள்ளிகளுக்கு புதிய ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்.

மாணவர்கள் எண்ணிக்கை அதிகமானால் வேறு ஆசிரியர்களை நியமிக்கலாம் என்று அரசு நினைப்பது அந்த பள்ளியில் சேர்க்கை அதிகரிக்காது என்ற மெத்தன போக்கினையே காட்டுகிறது.

இப்படி இருப்பது அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை என்பது மாணவர்கள் அதிகமாகட்டும் ஆசிரியர்கள் நியமனம் செய்யலாம் என்று அரசு நினைப்பதும், ஆசிரியர்கள் அதிகமாகட்டும் குழந்தைகளை சேர்க்கலாம் என்று பெற்றோர்கள் நினைப்பதும் அரசுப் பள்ளிகளில் சேர்க்கை குறைவற்கு மேலும் முக்கியமான காரணமாகும்.

தனியார் பள்ளிகள் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT – National Council of Educational Research and Training ) அமைப்பில் அங்கீகாரம்  பெற்று பாடத்திட்டங்களை அமைக்கிறது.

ஆசிரியர்

“கல்விச் செய்திகள் “