கால்நடை மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீட்டில் 52 அரசு பள்ளி மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் 52 அரசுப் பள்ளி மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கான சேர்க்கை ஆணை பெற்றனர்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் பிவிஎஸ்சி – ஏ.ஹெச். மற்றும் பி.டெக். படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் கடந்த 14-ம் தேதி வெளியிடப்பட்டது.
மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு சென்னை மாதவரம் பால் பண்ணை வளாகத்தில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கூட்ட அரங்கில் கடந்த 22-ம் தேதி நேரடியாக நடைபெற்றது. கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட 167 பேரில் 91 பேர் தேர்வு செய்யப்பட்டனர். சிறப்பு பிரிவினருக்கான 49 இடங்களில் 40 இடங்கள் நிரம்பின. மாற்றுத் திறனாளிகள் பிரிவில் யாரும் பங்கேற்காததால், அவர்களுக்கான பிவிஎஸ்சி – ஏ.ஹெச் – 6 இடங்கள், பி.டெக். – 3 இடங்கள் பொதுப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளன.

நேற்று 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நேரடியாக நடைபெற்றது. 366 பேர் அழைக்கப்பட்டனர்.
இதில், பிவிஎஸ்சி – ஏ.ஹெச். படிப்பில் 45, பி.டெக். படிப்புகளில் 7 என அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 52 இடங்களும் நிரம்பின. கல்லூரிகளில் தேர்வு செய்யப்பட்ட 52 பேருக்கும் சேர்க்கை ஆணையை கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
பொதுப் பிரிவு கலந்தாய்வு:
பிவிஎஸ்சி – ஏ.ஹெச். படிப்புக்கான பொதுப் பிரிவுக்கான முதல் சுற்று கலந்தாய்வு www.adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் கடந்த 21-ம் தேதி தொடங்கியது.
இடங்கள் ஒதுக்கீட்டுக்கான ஆணை வரும் 26-ம் தேதி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். சிறப்பு பிரிவு மற்றும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் இடம் கிடைக்காதவர்கள் பொதுப் பிரிவு கலந்தாய்வுக்கு பதிவு செய்யலாம் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.












