தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை – ( NAAC ) அறிமுகப்படுத்துகிறது கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு டிஜிட்டல் அங்கீகார முறை
உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்த, பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை (NAAC), தரச்சான்று செயல்முறையை புதுப்பித்து ஆன்லைனில் கொண்டு வந்துள்ளது.
தேசிய கல்விக் கொள்கை 2020 அறிமுகப்படுத்தப்பட்டதன் ஐந்தாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கல்வி அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரமாண்டமான நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 29 அன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

தற்போது வரை, நாட்டில் உள்ள 1,170 பல்கலைக்கழகங்களில் சுமார் 40% பல்கலைக்கழகங்கள் அங்கீகாரம் பெற்றுள்ளன. 50,000-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் 20 சதவீதத்திற்கும் குறைவாகவே அங்கீகாரம் பெற்றுள்ளது.இதனை 90%-95% வரை அங்கீகாரம் பெறுவதை உறுதி செய்வதே எங்கள் நோக்கம்” என்று NAAC நிர்வாகக் குழுவின் தலைவர் அனில் சஹஸ்ரபுதே தெரிவித்துள்ளார்.
அங்கீகாரம் என்பது நிறுவனத்தில் வழங்கப்படும் கல்வியின் தரத்திற்கான முத்திரையாகும். இந்த தர முத்திரை மாணவர்களுக்கு நல்லறிவைப் பெற பெரிதும் உதவும். மேலும் அதிக தொகையை கட்டணமாக செலுத்திய பிறகு நிறுவனத்தில் வழங்கப்படும் தரம் உறுதி செய்யப்படுவதால் பெற்றோரும் நிம்மதியடைவார்கள்.
உயர்கல்வி நிறுவனங்களுக்கு தற்போது ஐந்து ஆண்டு காலத்திற்கு வழங்கப்படும் NAAC தரச்சான்று புதுப்பிக்கப்பட்ட செயல்முறை இனி மூன்று ஆண்டுகளாகக் குறைக்கும். அங்கீகாரம் பெறுவதற்கான அடிப்படை செயல்முறை முழுமையாக ஆன்லைனில் செய்யப்படும், குழுவின் நேரடி வருகைகள் எதுவும் தேவையில்லை. செயல்முறையை எளிதாக்குவதிலும், உயர்கல்வி நிறுவனங்கள் NAAC-க்கு விண்ணப்பிக்க முன்வருவதை ஊக்குவிப்பதிலும் இது ஒரு முக்கிய படியாகும்,

5 நிலைகள் :
தரச்சான்று பெறுபவர்கள் அடுத்து முதிர்வு அடிப்படையிலான தரப்படுத்தப்பட்ட அங்கீகாரத்தைத் தேர்வுசெய்யலாம், இதில் 1 முதல் 5 நிலைகள் அறிமுகப்படுத்தப்படும். கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தங்களை மேம்படுத்திக் கொள்ளலாம்.
நிலை-1 மற்றும் நிலை-2 பெறுவது எளிதானது ஆன்லைனில் பெறலாம்.
நிலை-3 என்பது NAAC குழுவால் நிறுவனத்திற்கு ஆன்லைன் மற்றும் களத்திற்கு நேரடி வருகைகளின் ஆய்வாக இருக்கும் என்றும்,ஏற்கனவே உயர் தரத்தை வழங்கும் நிறுவனங்கள் படிப்படியாக செயல்முறையை அணுகுவதற்குப் பதிலாக நேரடியாக உயர் நிலைக்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறினார்.
நிலை-4 மற்றும் நிலை-5 ஆகியவற்றைப் பெறுவதற்கு கடுமையான தகுதி அளவுகோலாக இருக்கும்.
இது சர்வதேச தரத்திற்கு இணையான கல்வியை வழங்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று NAAC நிர்வாகக் குழுவின் தலைவர் அனில் சஹஸ்ரபுதே கூறியுள்ளார்.
ஏற்கனவே உள்ள முறையில் நல்ல மதிப்பெண் பெற முடியாது என்ற எண்ணத்தில் கடந்த காலங்களில் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.












