காலையில் உற்சாகம், மாலையில் சோர்வு: இன்று பள்ளி திறப்பு நாளில் மாணவர்கள்

காலையில் உற்சாகம், மாலையில் சோர்வு:
இன்று பள்ளி திறப்பு நாளில் மாணவர்கள்

பள்ளி இறுதி தேர்வுகள் முடிந்து ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி கோடை விடுமுறை விடப்பட்டது.

இந்நிலையில் கோடை வெப்பம் அதிகமாக இருக்கும் என்ற காரணத்தினால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகும் என்ற எண்ணத்தில் செய்திகள் வெளியாகின.

மேலும் ஜூன் மாதம் 9 ம் தேதி பள்ளிகள் திறக்கும் என்ற செய்திகளும் உலாவி கொண்டிருந்தன.

இந்த சூழ்நிலையில் பள்ளிக்  கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆரம்பம் முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் அந்த நேரத்தில் முதல் வரிடம் ஆலோசனை கேட்டு பள்ளிகள் திறப்பு தேதி அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தார்.

இருந்தாலும் ஆரம்ப முதலே ஜூன் 2 ம் தேதி பள்ளிகள் திறக்கும் என்று அறிவித்திருந்தார்.

ஆனால் கோடை மழை அனைத்து இடங்களிலும் பரவலாக பெய்ததால் வெயிலின் தாக்கம் குறைந்தது. மேலும் தென்மேற்கு பருவமழை முன்னதாக ஆரம்பித்து விட்டதால் வெயிலின் தாக்கம் மேலும் குறைந்தது.

எனவே 36 நாட்கள் கோடை விடுமுறை முடிந்து 2025 – 26 ம் கல்வி ஆண்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் இன்று ஜூன் 2 ம் தேதி திங்கட்கிழமை ஆரம்பமானது.

காலையில் பள்ளிக்கு உற்சாகமாக மாணவர்கள் சென்றனர். பள்ளியில் இன்று பாட வகுப்புகளை ஆசிரியர்கள் நடத்த தொடங்கினர்.

இன்று பள்ளி திறந்த முதல் நாளில் பள்ளிகளில் நன்னெறி வகுப்புகள் நடத்தப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.ஆனால் இன்று நன்னெறி வகுப்புகள் நடைபெற்றதா என்பது தெளிவாக தெரியவில்லை. மாணவர்கள் பாட வகுப்பு முடிந்து மாலையில் வீடு திரும்பினர்.

சில பள்ளிகளில் வகுப்பு நேரம் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை மாலை 5.00 மணி வரையும், 10 முதல் 12 ஆம் வகுப்புகள் வரை மாலை 5.30 மணி வரையும் நடத்தப்பட்டது. இதனால் மாணவர்கள் பள்ளி முடிந்து சோர்வாக வீடுகளுக்கு திரும்பினர்.

பள்ளி தொடங்கிய முதல் நாளில் பள்ளி வேலை நேரத்தை அதிகமாக நீட்டியதே மாணவர்களின் சோர்வுக்கு காரணமாகும்.

கேரளாவில் பள்ளி திறந்த முதல் ஒரு வாரத்திற்கு மாணவர்கள் நோட்டு புத்தகம் கொண்டு வர வேண்டாம் என்று கேரள அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கதாகும்.