தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு உன்னால் முடியும் தேர்வு வழிகாட்டுதல் பயிற்சி !
தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியின் 75வது பவள விழா ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவ, மாணவியருக்காக தொடர்ந்து 3 வது ஆண்டாக “உன்னால் முடியும்” எனும் தேர்வு வழிகாட்டுதல் பயிற்சி 13.10.2026, செவ்வாய்க்கிழமை இன்று நடைபெற்றது.
கி. பி. 1951 ஆண்டு அனைவருக்கும் தரமான கல்வியை தர வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் குலபதி ஏ.பி.சி. வீரபாகு அவர்களால் துவங்கப்பட்டு கடந்த 75 ஆண்டுகள் கடந்து கல்வியை சேவையாக மட்டுமே வழங்கி வரக்கூடிய வ.உ.சிதம்பரம் கல்லூரியில் பவள விழாவின் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோரின் வழிகாட்டுதலில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இதில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த ஏறத்தாழ 33 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 550 மாணவ, மாணவியர்கள் பங்கு பெற்று பயனடைந்தனர்.
இதில் +2 அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களை பெறுவதற்கான வழிகாட்டுதல் பயிற்சியும், மருத்துவக் கனவோடு பயில்கின்ற மாணவ, மாணவியருக்கான இணையவழி நீட் மாதிரி தேர்வும் நடைபெற்றது.
துவக்க விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர்.வீரபாகு தலைமை உரையாற்றினார்.

மேலும் வ.உ.சிதம்பரம் கல்லூரி முதல்வர் இந்நிகழ்விற்கு அனுமதி அளித்த தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், தூத்துக்குடி மாவட்ட பள்ளிக் கல்வித் துறை, மாணவ, மாணவியர்களை நிகழ்வில் பங்கு பெறச் செய்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், மாணவ, மாணவியர்களை நிகழ்வுக்கு அழைத்து வந்த ஆசிரியர் பொறுப்பாளர்கள், மற்றும் மாணவ, மாணவிகளை வாழ்த்திப் பேசினார்.
மேலும் வ. உ. சிதம்பரம் கல்லூரியின் வரலாற்றில் சமூகத்தின் மேம்பாட்டிற்காக மாணவ,மாணவிகளின் வளர்ச்சிக்காக என்னென்ன நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது என்பதை பற்றியும் விளக்கி கூறினார்.

இந்நிகழ்வில் பண்ணிரெண்டாம் வகுப்பை முடித்த மாணவ,மாணவியர்கள் தொடர்ந்து கல்லூரிப் படிப்பை தெரிவு செய்வதற்கான வழிகாட்டுதல் முகாம் நடைபெற உள்ளது என்றும் கூறினார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை வ. உ.சிதம்பரம் கல்லூரியின் முதல்வர் முனைவர்.வீரபாகு தலைமையில் முனைவர்.ஜாக்சன் ஒருங்கிணைப்பில், பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத அலுவலர்கள் செய்திருந்தனர்.












