பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்த தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கல்லூரி – சுப்பையா வித்யாலயம் பள்ளியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்து !

பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்த தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கல்லூரி – சுப்பையா வித்யாலயம் பள்ளியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்து !

பவள விழா ஆண்டை முன்னிட்டு, தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கல்லூரி, கல்வித் துறையில் முன்னோடி முயற்சியாக, 02.07.2026 வியாழக்கிழமை, தூத்துக்குடி, சுப்பையா வித்யாலயம் பள்ளியுடன், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டது.

தூத்துக்குடியில் பள்ளி–கல்லூரி இடையேயான கட்டமைக்கப்பட்ட கல்வி ஒத்துழைப்புகளில் இதுவும் ஒரு முன்னோடி முயற்சியாக அமைந்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம், உயர்கல்வியின் பரப்பை விரிவுபடுத்துவதோடு, மாணவர்கள் எதிர்காலத்தில் வெற்றிபெற தேவையான அறிவு, திறன் மற்றும் நற்பண்புகளை வளர்த்தெடுப்பதாகும்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்:

*மாணவர்களிடம் ஆராய்ச்சி மனப்பான்மையை வளர்த்தல்.

*தன்னம்பிக்கையை மேம்படுத்துதல்.

*உயர்கல்வி வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.

*டிஜிட்டல் அறிவுத்திறன் மற்றும் வேலைவாய்ப்புத் திறன் குறித்த பயிற்சி அளித்தல்.

*மொழித்திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்துதல்.

*தொழில்துறை நிறுவனங்களுக்கு கல்விச் சுற்றுப்பயணங்களை ஏற்பாடு செய்து செய்முறை அனுபவம் வழங்குதல்.

*விளையாட்டு மற்றும் பண்பாட்டு நிகழ்வுகள் மூலம் மாணவர்களின் முழுமையான ஆளுமை வளர்ச்சியை ஊக்குவித்தல்.

*தலைமைத்துவப் பண்புகள் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வளர்த்து, பொறுப்புள்ள குடிமக்களாக உருவாக்குதல்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், வ.உ. சிதம்பரம் கல்லூரியின் முதல்வர் முனைவர்.வீரபாகு மற்றும் சுப்பையா வித்யாலயம் பள்ளியின் தலைமையாசிரியை விபாஸ்ரீ ஆகியோர், பள்ளியின் செயலாளர் முரளி ராஜகோபாலன் முன்னிலையில் கையெழுத்திட்டனர்.

இந்நிகழ்வு, கல்வி மேம்பாடு மற்றும் சமூக முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்ட நீண்டகால கூட்டாண்மையின் தொடக்கமாக அமைந்தது.

இது குறித்து கல்லூரி முதல்வர் முனைவர்.வீரபாகு கூறியதாவது:
இந்த உயரிய முயற்சியை முன்னெடுத்த நிர்வாகத்திற்கும், மாண்புமிகு செயலருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், மாணவர் சமூகத்தின் நலனுக்காக இந்த ஒத்துழைப்பை வழங்கிய சுப்பையா வித்யாலயம் பள்ளியின் செயலாளர் முரளி ராஜகோபாலன் அவர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இந்தத் திட்டத்தின் SPOC (Single Point of Contact) மற்றும் ஒருங்கிணைப்பாளராக வேதியியல் துறையின் உதவிப் பேராசிரியர் டாக்டர் ஷீபா தவமணி செயல்படுவார்கள்.