பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு பணி நாளை ( 06 – 04 – 2026 ) தொடங்குகிறது:

பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு பணி நாளை ( 06 – 04 – 2026 ) தொடங்குகிறது:

தமிழகத்தில் 2026 ம் கல்வி ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2 ம் தேதி திங்கட்கிழமை தொடங்கி 26-ம் தேதி வியாழக்கிழமை வரை நடைபெற்றது.

இந்த தேர்வை மாநிலம் முழுவதும் இருந்து 3,412 தேர்வு மையங்களில் 8 லட்சத்து 27,475 பேர் எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதில் 7,545 பள்ளிகளில் இருந்து 7 லட்சத்து 99,692 மாணவர்கள், 27,783 தனித்தேர்வர்கள் அடங்குவர். மேலும் 7,465 மாணவர்கள் ஸ்கிரைப் உதவியுடன் தேர்வெழுதினர்.

பொதுத்தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் 44,624 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். முறைகேடுகளைத் தடுக்க 4,540 நிலையான பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருந்தது.

அதேபோல், மாவட்ட ஆட்சியர், முதன்மை, வட்டாரக் கல்வி அலுவலர், மற்றொரு வருவாய்த் துறை அதிகாரிகள், தலைமையகத்தில் சிறப்புக் கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப் பட்டிருந்தது. 154 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் 24 மணி நேரம் ஆயுதம் தாங்கிய காவல் துறை அதிகாரிகள் பதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த 93 தேர்வு மையங்களில் 8,547 மாணவர்கள்,10,724 மாணவிகள் என மொத்தம் 19,271 தேர்வர்கள் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வினை எழுத விண்ணப்பித்து இருந்தனர்.

மேல்நிலை இரண்டாம் ஆண்டு
பொதுத்தேர்விற்கு 93 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், ஒரு கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளர், 93 துறை அலுவலர்கள், 1369 அறைக் கண்காணிப்பாளர்கள், 140 நிலையான படையினர், 153 சொல்வதை எழுதுபவர், 25 வழித்தட அலுவலர்கள், 10 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், 186 ஆசிரியரல்லா பணியாளர்கள் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இத்தேர்வுக்கான விடைத்தாளை மதிப்பீடு செய்யும் பணி நாளை 06 – 04 – 2026 திங்கட்கிழமை முதல் தமிழகமெங்கும் தொடங்கி நடைபெற இருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் விடைத்தாள் மதிப்பீட்டு பணி நாளை ஏப்ரல் 6 ம் தேதி திங்கட்கிழமை தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற இருக்கிறது.

நாளை 06 – 4 – 2026 திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணியை முதன்மை தேர்வாளர்கள் மற்றும் கூர்ந்தாய்வு அலுவலர்கள் தொடங்க இருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் 07 – 4 – 2026 செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணி முதல் உதவித் தேர்வாளர்கள் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாளை மதிப்பீடு செய்ய இருக்கிறார்கள்.

விடைத்தாள் திருத்தும் பணி முடிந்த பின் மதிப்பெண்கள் பட்டியல் தயார் செய்யும் பணி தொடங்கி நிறைவடைந்தவுடன் தேர்வுக்கான முடிவுகள் மே மாதம் 08 ம் தேதி வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.