12 ம் வகுப்பு பொதுத்தேர்வு :
தூத்துக்குடி மாவட்டத்தில் 19,076 மாணவ – மாணவிகள் தேர்வு எழுதினர் :
தமிழ் பாடம் எளிதாக இருந்ததால் மாணவிகள் மகிழ்ச்சி
12 ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று ( 02 – 03 – 2026 ) திங்கட்கிழமை தொடங்கி 26.03.2026 வியாழக்கிழமை வரை உள்ள நாட்களில் நடைபெறவுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 93 தேர்வு மையங்களில் 8,547 மாணவர்கள்,10,724 மாணவிகள் என மொத்தம் 19,271 தேர்வர்கள் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வினை எழுத இருந்த நிலையில் முதல் நாளான இன்று தமிழ் பாட தேர்வினை 110 மாணவர்கள் மற்றும் 82 மாணவிகளைத் தவிர 19,076 பேர் தேர்வினை எழுதினர். இதில் 2 மாணவர்கள் மற்றும் 1 மாணவி ஆக மொத்தம் 3 பேர் மொழி விலக்கு ( தமிழ் தவிர ) பெற்றவர்கள் ஆவர். இது மொத்தத்தில் 99 சதவீதம் ஆகும்.
முதல் நாளான இன்று தமிழ் பாட தேர்வுக்கான கேள்விகள் எளிதாக இருந்ததாகவும், தேர்வினை சிறந்த முறையில் எழுதியதாகவும் தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கூறினர்.
தேர்வுக்கான ஏற்பாடுகள் :
மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்விற்கு 93 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், ஒரு கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளர், 93 துறை அலுவலர்கள், 1369 அறைக் கண்காணிப்பாளர்கள், 140 நிலையான படையினர், 153 சொல்வதை எழுதுபவர், 25 வழித்தட அலுவலர்கள், 10 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், 186 ஆசிரியரல்லா பணியாளர்கள் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அனைத்து தேர்வு மையங்களிலும் காற்றோட்டமான தேர்வறைகள், தூய்மையான குடிநீர் வசதி, தூய்மையான கழிப்பறை வசதி போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கென தரைதளத்தில் உள்ள தேர்வறைகளில் தேர்வெழுதவும் சொல்வதை எழுதுபவர் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களுக்கு உரிய போக்குவரத்து வசதி, காவலர் பாதுகாப்பு வசதி, தடையில்லா மின்சாரம் ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு தேர்வுகள் நல்ல முறையில் இன்று நடைபெற்றது.
மாணவர்கள் தேர்வு சார்பான சந்தேகங்களை தெளிவுபடுத்தவும், அச்சமின்றி தேர்வெழுத ஆலோசனைகள் பெறவும் 14417 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி சென்று பார்வையிட்டார்.

12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் நாளான இன்று தமிழ் பாட தேர்வுக்கான கேள்விகள் எளிதாக இருந்ததால் தேர்வினை சிறந்த முறையில் எழுதிவிட்டு மகிழ்ச்சியில் தேர்வு மையத்தை விட்டு வெளிவந்த தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள்













