பள்ளியைத் தேடி……. நீங்கா நினைவுகளுடன் இயக்குனர் மாரி செல்வராஜ்

பள்ளியைத் தேடி…….
நீங்கா நினைவுகளுடன் இயக்குனர் மாரி செல்வராஜ்

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி தனது 75 ஆவது ஆண்டு பவள விழாவை கொண்டாடி வருகிறது.அதனை ஒட்டி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆகியோர்களுக்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

இந்நிலையில் நேற்று பிப்ரவரி – 27 வெள்ளிக்கிழம” ரிதம் 75 ” என்ற கலைத் திருவிழாவை நடத்தியது.மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையில் நடைபெற்ற இந்த திருவிழாவின் தலைமை விருந்தினராக பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் கலந்து கொண்டார்.

நேற்று கல்லூரிக்கு வருகை தந்த இயக்குனருக்கு கல்லூரிச் செயலர் திரு.ஏ.பி.சி.வீ.சொக்கலிங்கம், வ.உ.சி.கல்வியியல் கல்லூரி மற்றும் பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி செயலாளர் திரு.ஏ.பி.சி.வீ.சண்முகம் மற்றும் வ.உ.சிதம்பரம் கல்லூரி முதல்வர் முனைவர்.வீரபாகு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.சிறப்பு விருந்தினராக ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியின் செயலர்.சொ.சுப்புலட்சுமி கலந்து கொண்டு சிறப்பித்தார்.

நிகழ்ச்சி நடைபெறும் கல்லூரி கலையரங்கத்திற்கு வருகை புரிந்த இயக்குனரை மாணவ, மாணவிகள் உற்சாகமான கோஷத்துடன் வரவேற்றனர்.

மாணவர்களின் ஆர்ப்பரிப்பில் திக்கு முக்காடிய இயக்குனர் கல்லூரி கலையரங்கின் மேடையில் ஏறி மாணவ மாணவிகளை பார்த்து கையசைத்தார்.

பின்பு கலையரங்கில் அமர்ந்து பல்வேறு கல்லூரிகளை சார்ந்த மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் ஆடல் பாடல்களை மிகவும் ரசனையுடன் ரசித்து வந்த மாரி செல்வராஜ் அதிக நேரம் மாணவர்களின் நிகழ்ச்சிகளை கண்டு களித்தார்.

நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு புறப்படுவதற்கு முன்னர் மாரி செல்வராஜ் தான் படித்த பள்ளியை காண வேண்டும் என்ற ஆர்வத்தில் பாரதியார் வித்யாலயம் ( தான் நடிக்கும் போது சுப்பையா வித்யாலயம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்ற பெயரில் இருந்தது) மேல்நிலைப் பள்ளிக்கு தனது காரில் புறப்பட்டுச் சென்றார். பள்ளிக்கு வருகை தந்த இயக்குனர் மாரி செல்வராஜை பள்ளித் தலைமையாசிரியர் தட்சிணாமூர்த்தி வரவேற்றார்.

பள்ளிக்குள் ஆர்வமாக சென்ற இயக்குனர் தான் படித்த வகுப்பறைக்கு நேராக சென்று வகுப்பறையில் உள்ள பெஞ்சில் அமர்ந்து சந்தோசம் அடைந்தார்.பள்ளி வகுப்பறையில் அமர்ந்திருந்த இயக்குனர் தனது பள்ளியில் படித்த காலத்தின் இளமையான நினைவுகளை அசை போட்டார்.

பள்ளி கரும்பலையில் “நீங்கா நினைவுகளுடன்” என்று எழுதி கையெழுத்திட்டார்.அப்போது தனக்கு கணிதம் கற்றுக் கொடுத்த ஆசிரியர் ( மறைந்த) தெய்வ முருகன் அவர்களை நினைவு கூர்ந்தார்.

அதன் பின்னர் தலைமை ஆசிரியர் அறைக்கு சென்ற இயக்குனருக்கு தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி பொன்னாடை போர்த்தி,நினைவுப் பரிசு வழங்கி மரியாதை செலுத்தினார்.

பின்னர் தலைமை ஆசிரியர் அறையில் வரிசையாக சுவற்றில் மாட்டி இருந்த முன்னாள் தலைமை ஆசிரியர்களின் புகைப்படத்தை ஒவ்வொன்றாக பார்வையிட்டபோது தான் படிக்கும் போது தலைமை ஆசிரியராக இருந்த ராஜகோபால் அவர்களை விசாரித்த போது கொரானோ காலகட்டத்தில் அவர் இறந்து விட்டதாக தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி கூறியபோது இயக்குனரின் கண் கலங்கியது.

சிறிது இடைவெளி விட்டு அமர்ந்து தனது இளமைப் பருவத்தை அசை போட்ட இயக்குனரிடம் பள்ளி பருவத்தில் படிக்கும் போது உங்கள் மனதில் நீங்காத இடம் பெற்ற நினைவுகள் எதுவும் உள்ளதா என்று கேட்ட பொழுது நிறைய இருக்கின்றது என்று கூறினார். அதனைப் பற்றி ஒரு வார்த்தை கூறுங்கள் என்றபோது நிறைய தடவை ஆசிரியரிடம் அடி வாங்கி இருக்கிறேன். பள்ளி விடுதியில் தங்கியிருக்கும் பொழுது இரவில் சினிமாவிற்கு நண்பர்களுடன் சென்று திரும்பும் போது ஆசிரியரிடம் அதிக முறை வாங்கி இருக்கிறேன் என்று கூறினார்.

தூத்துக்குடி ராஜ் திரையரங்கம் எப்படி இருக்கிறது என்று கேட்டறிந்த இபக்குனர், மேலும் கே.எஸ்.பி.எஸ் கணபதி கலை அரங்கத்தையும் விசாரித்தார்.அதன் பின்புறம் உள்ள பகுதி இப்பொழுது எப்படி இருக்கிறது என்று கேட்டு தெரிந்து கொண்டார்.

மேலும் பள்ளியில் படிக்கும் பொழுது உங்கள் நண்பர்கள் இருக்கிறார்களா என்ற கேள்விக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள் என்றும் பெயர் சொல்லுங்கள் என்று போது ரமேஷ், சந்தனம் என்றும் அவர்களிடம் இப்பொழுது தொடர்பு இல்லை என்றும் அவர்களை நினைவு கூர்ந்தார்.நண்பர்களே உங்கள் பெயரை நினைவு கூர்ந்த உங்கள் இயக்குனர் நண்பரை தொடர்பு கொள்ளுங்கள் உங்கள் நண்பர் மாரி செல்வராஜ் உங்களை தேடுகிறார்.

தற்பொழுது எந்த படம் இயக்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்ட பொழுது மாரி செல்வராஜ் நடிகர் தனுஷை வைத்து ஒரு படம் இயக்க இருப்பதாகவும் அதற்கான கதையை எழுதிக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.

அதன் பிறகு பள்ளியில் படிக்கும் போது வளாகத்தில் விடுதி இருந்த இடத்தை பார்த்து மகிழ்ச்சியடைந்தார்.

நினைவுகளை சுமப்பவன் தான் படைப்பாளி ஆகிறான் அந்த வகையில் இயக்குனர் மாரி செல்வராஜ் பல நினைவுகளை சுமைகளாக சுமப்பதனால் தான் மிகச்சிறந்த படைப்பாளியாக, ஒரு இயக்குனராக வலம் வருகிறார் என்பது தான் நிதர்சனமான உண்மை.

க.பொன் பலவேச ராஜ்

ஆசிரியர்

“கல்விச் செய்திகள்”

                                                                                                                             ராஜ கோபால்
                                                                                                           முன்னாள் தலைமை ஆசிரியர்

 

 

 

 

                                                                                         தெய்வ முருகன் முன்னாள் கணித ஆசிரியர்