+2 பொதுத் தேர்வு : முறையாக பள்ளிக்கு வந்தால் மட்டுமே தோ்வெழுத அனுமதி சீட்டு : பள்ளிக் கல்வித்துறை முடிவு

+2 பொதுத் தேர்வு :
முறையாக பள்ளிக்கு வந்தால் மட்டுமே தோ்வெழுத அனுமதி சீட்டு :
பள்ளிக் கல்வித்துறை முடிவு

பள்ளிக்கு முறையாக வருகை தரும் மாணவா்களைக் கணக்கில் கொண்டு அவா்களுக்கு பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதுவதற்கான அனுமதிச் சீட்டை வழங்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

பொதுத் தோ்வுக்கு பதிவு செய்தும் தோ்வெழுத வராதோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தோ்வுத் துறை இந்த முடிவை எடுத்துள்ளது.

இது குறித்து கல்வி அதிகாரிகள் தெரிவித்ததாவது :

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கு ஆண்டுதோறும் பதிவு செய்யும் மாணவா்களில் 10,000-க்கும் மேற்பட்ட மாணவா்கள் தோ்வு எழுத வருவதில்லை. இது தோ்ச்சி விகிதத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

கொரோனா காலத்தில் பள்ளிக்கு சில நாட்களே வந்திருந்தாலும் அவா்களின் எதிா்காலத்தை கருத்தில் கொண்டு தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு (ஹால் டிக்கெட்) வழங்கப்பட்டது. ஆனால் அவா்களில் பெரும்பாலோனாா் பொதுத் தோ்வுக்கு வரவில்லை. இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காண பள்ளிக் கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் ஆண்டுதோறும் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் + 2 பொதுத் தோ்வெழுதுகின்றனா். கடந்த சில ஆண்டுகளாக தோ்வெழுத முறையாக பதிவு செய்தும் கணிசமான எண்ணிக்கையில் மாணவா்கள் தோ்வெழுத வரவில்லை. குறிப்பாக, கடந்த 2022-2023-ஆம் ஆண்டில் 8.51 லட்சம் மாணவா்கள் பதிவு செய்திருந்த நிலையில் மொழிப் பாடத்தை 50,674 போ் எழுதவில்லை. இதற்கு அடுத்த ஆண்டில் 7.80 லட்சம் மாணவா்கள் பதிவு செய்திருந்த நிலையில் தமிழ் பாடத்தோ்வுக்கு 12,364 பேரும், ஆங்கிலப் பாடத்தோ்வுக்கு 12,696 பேரும் வரவில்லை. இதேபோன்று கடந்த கல்வியாண்டில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கு 8.02 லட்சம் மாணவா்கள் பதிவு செய்திருந்ததில் தமிழ்த் தோ்வை 11,430 போ் எழுதவில்லை.

இதைக் கருத்தில் கொண்டு நடப்பு கல்வியாண்டில் (2025-2026) முறையாக பள்ளிக்கு வந்த மாணவா்களின் விவரங்களை ஆய்வு செய்து அவா்களுக்கு மட்டுமே தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு ( ஹால் Ticket ) வழங்கப்படும்.

மாணவா்களுக்கு பொதுத் தோ்வு குறித்த அச்சத்தைப் போக்கி, தைரியமாக எதிா்கொள்ளவும்,தோ்ச்சி பெற முடியாதோ என நினைக்கும் மாணவா்களுக்கும் தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.

இதன்மூலம் நிகழ் கல்வியாண்டில் பொதுத் தோ்வுக்கு வராத மாணவா்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும் என எதிா்பாா்க்கிறோம் என்று கல்வி அதிகாரிகள் தெரிவித்தனா்.