எம். பி. பி. எஸ் சீட் ஒதுக்கப்பட்டும் சேராத மாணவர்கள் :
அகில இந்திய அளவில் 802, தமிழகத்தில் 136 எம்.பி.பி.எஸ் இடங்கள் காலி
மத்திய மருத்துவக் கலந்தாய்வுக் குழு (MCC) நடத்திய 3 சுற்றுக் கலந்தாய்வுக்குப் பிறகும், தமிழகத்தில் 136 எம்.பி.பி.எஸ் இடங்கள் காலியாக உள்ளன. இதில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 22 இடங்கள் மற்றும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள 9 இடங்களும் அடங்கும். இடங்கள் ஒதுக்கப்பட்ட மாணவர்கள் அந்தந்த கல்வி நிறுவனங்களில் சேராததே இதற்குக் காரணமாகும். இந்தியா முழுவதும் மொத்தம் 802 எம்.பி.பி.எஸ் இடங்கள் காலியாக இருப்பதாக அக்குழு தெரிவித்துள்ளது.
இந்த இடங்கள் அனைத்தும் ‘Stray Round’-க்கான இடப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. Stray சுற்றில் ஒதுக்கப்படும் இடங்களில் சேராவிட்டால் விதிக்கப்படும் அபராதம் மிக அதிகம் என்பதால், இந்த இடங்கள் நிரப்பப்பட வாய்ப்புள்ளது. மத்திய அரசு மருத்துவ நிறுவனங்கள், மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 15% அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிகர்நிலைப் பல்கலை. மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மத்தியக் குழு ஆன்லைனில் நடத்துகிறது.

தகுதியின் அடிப்படையிலேயே இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இருப்பினும், 3 சுற்றுக் கலந்தாய்வின் முடிவில், அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் 389 இடங்கள், நிகர்நிலை பல்கலை.யில் 334 இடங்கள், மத்திய அரசு நிறுவனங்களில் 38 இடங்கள். இதுதவிர, ஜெயின் சிறுபான்மையினர், வெளிநாடு வாழ் இந்தியர் (NRI), மற்றும் ஆயுதப் படையினரின் குழந்தைகள்/விதவைகள் போன்ற சிறப்பு ஒதுக்கீட்டு இடங்களும் காலியாக உள்ளன.
தவறான விதிகளே ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ மாணவர் சேர்க்கை தாமதத்திற்கு காரணம் என்று நிபுணர்கள் குற்றம்சாட்டுகின்றனர். 3-வது சுற்றில் அனைத்து இடங்களும் மாணவர்களின் விருப்பப்படியே ஒதுக்கப்பட்டன. முதல் சுற்றில், மாணவர்கள் கல்லூரிகளில் சேராமல் வெளியேறவும், 2-ம் சுற்றில் மீண்டும் விண்ணப்பிக்கவும் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் 3-வது சுற்றில், ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் சேரவில்லை என்றால், அரசு நிறுவனங்களுக்கு ரூ.10,000 ரூபாயும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு ரூ.2 லட்சம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படுகிறது. சில மாணவர்கள் இந்த அபராதத் தொகையைக் கட்டிவிட்டு விலகும்போது, அரசு இடம் தேவைப்படும் ஏழை மாணவருக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்படுகிறது அல்லது அவர் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் அதிக கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார் என்று கல்வி நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மாநில ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகள், மாநில தனியார் பல்கலைக் கழகங்களில் உள்ள அனைத்து இடங்களுக்கும் கலந்தாய்வு நடத்தும் மாநிலத் தேர்வுக் குழு, தனது மூன்றாவது சுற்றில் இடங்கள் ஒதுக்கப்பட்ட மாணவர்கள் கல்லூரிகளில் சேருவதற்காகக் காத்திருக்கிறது. இவர்களுக்கான Stray Round நவம்பர் 2-வது வாரத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












