கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் ‘நான் முதல்வன்’ பல்கலைக்கழக அளவிலான ஹாக்கத்தானில் வெற்றி
கோவில்பட்டி, உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் ‘நான் முதல்வன்’ பல்கலைக்கழக அளவினான ஹாக்கத்தானில் மூன்றாம் இடம் மற்றும் ஆறாம் இடம் பெற்றனர்.
தமிழ்நாடு அரசு சார்பில், மாணவர்களின் புதுமைச் சிந்தனை, தொழில்நுட்ப திறன் மற்றும் பிரச்சனைத் தீர்க்கும் திறனை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் நான் முதல்வன் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் நடைபெறும் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் வணிகவியல் துறைக்கான உள் ஹாக்கத்தான் (Internal Hackathon) போட்டிகள் அண்மையில் நடத்தப்பட்டன.

இந்த உள் ஹாக்கத்தானில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்கள், அடுத்த கட்டமான மாவட்ட அளவிலான ஹாக்கத்தான் போட்டிகளில் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். அதில் சிறந்த அணிகள் தேர்வு செய்யப்பட்டு, பல்கலைக்கழக அளவிலான ஹாக்கத்தான் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றனர்.
இப்போட்டி மணோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளுக்கிடையே நடைபெற்றது. தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 60க்கும் மேற்பட்ட அணிகள் இப்போட்டியில் பங்கேற்றன.
அந்தப் போட்டியில், கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் தங்கள் புதுமையான சிந்தனை மற்றும் திறமையால் மிளிர்ந்து, சிறப்பான சாதனையைப் பெற்றனர்.
அதில், கரிஷ்மா, மாரியம்மாள், சரண்யா ஆகிய மாணவிகள் சிறப்பாக செயல்பட்டு, திருநெல்வேலி செயிண்ட் ஜான்ஸ் கல்லூரியில் நடைபெற்ற “நான் முதல்வன்” பல்கலைக்கழக அளவிலான ஹாக்கத்தான் போட்டியில் மூன்றாம் பரிசை பெற்றனர்.

அதேபோல், மஞ்சன பார்வதி, நிவேதா, வனிதாராணி, சக்தி ஸ்ரீ ஆகிய மாணவிகள் ஆறாம் இடத்தைப் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்தச் சாதனையை முன்னிட்டு, கல்லூரித் தாளாளர் விஜயன், முதல்வர் முனைவர். அண்ணாமலைசாமி, ‘நான் முதல்வன்’ திட்ட ஒருங்கிணைப்பாளர், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் மாணவிகளை வாழ்த்திப் பாராட்டினர்.












