ஐகோர்ட் உத்தரவுப்படி
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு இன்று நடைபெற்றது
தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 1,996 முதுநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வு மாநிலம் முழுவதும் 809 தோ்வு மையங்களில் இன்று (அக்.12) நடந்து முடிந்தது.
தமிழகத்தில் முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினி பயிற்றுநர் நிலை-1 ஆகிய பணிகள் சார்ந்த 1,996 காலிப்பணியிடங்களுக்கான அறிவிக்கை கடந்த ஜூலை 10-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
அதன்படி இந்தத் தேர்வு தமிழகம் முழுவதும் இன்று காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை 809 தேர்வு மையங்களில் நடைபெற்றது.
இத்தேர்வில் தமிழ், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வணிகவியல், பொருளியல், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், கணினி அறிவியல், உடற்கல்வி ஆகிய 14 பாடங்கள் சாா்ந்த 1,996 காலிப்பணியிடங்களுக்கு 2 லட்சத்து 36 ஆயிரத்து 530 போ் இணையவழியில் விண்ணப்பித்து இருந்தனர்.
தமிழகத்தில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு அக்டோபர் 12 ஆம் தேதி போட்டி தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூலை மாதம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
புதிய பாடத்திட்டங்கள் அடிப்படையில் இந்தத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாலும், இத்தேர்வு நவம்பர் மாதம் நடத்தப்படும் என்று உத்தேசமாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், முன்கூட்டியே தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், தங்களால் தேர்வுக்கு தயாராக இயலவில்லை என கூறி, தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் விண்ணப்பதாரர்கள் பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனா்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, தேர்வை ஒத்தி வைக்கும்படி ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட முடியாது என கூறி, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, முதுநிலை ஆசிரியர் தோ்வு இன்று நடைபெற்றது.

தேர்வு குறித்த வழக்கில் அரசு வாதத்தின் சாரம்சம் :
ஆசிரியர்களுக்கான இந்த தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்ற தேர்வர்கள் கோரிக்கை வைத்தனர். சிலர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது தேர்வுக்கு விண்ணப்பத்திருந்த 2 லட்சத்து 36 ஆயிரத்திற்கு மேற்பட்டருக்கு நுழைவுச்சீட்டு தயாரிக்கப்பட்டதாகவும், ஓஎம்ஆர் விடைத்தாள்கள் தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
அரசு தரப்பு வாதத்தை ஏற்ற நீதிமன்றம் முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது அதன்படி இன்று தேர்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.












