குரூப் 2, குரூப் 2-ஏ தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியாகும் :
டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் தகவல்
டின்பிஸ்சி தலைவர் பிரபாகர் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
குரூப் 2 தேர்வுகள் தமிழ்நாடு முழுவதும் நேற்று ( செப்டம்பர் 28 ) நடந்துள்ளது. சார்பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு 645 காலிப்பணியிடங்கள் உள்ளது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் 5 லட்சத்து 53 ஆயிரத்து 634 விண்ணப்பித்திருந்னர். அதில் 4 லட்சத்து 18 ஆயிரத்து 791 பேர் தேர்வை எழுதி இருக்கின்றனர். 1 லட்சத்து 34 ஆயிரத்து 843 பேர் எழுத வரவில்லை.
அதாவது விண்ணப்பித்தவர்களில் 75.64 சதவீதம் பேர் தேர்வை எழுதி உள்ளனர். 645 குரூப்-2, 2ஏ காலிப் பணியிடங்களுக்கு 4 லட்சத்து 18 ஆயிரத்து 791 பேர் போட்டியிடுகிறார்கள். ஒரு இடத்துக்கு மட்டும் 650 பேர் களத்தில் நிற்கிறார்கள்.

ஓஎம்ஆர் கேள்வித்தாள் முறையில் நடைபெறும் இத்தேர்வில் 200 கேள்விகள் இடம்பெறும். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்படும்.
மேலும் அதனைத் தொடர்ந்து முதன்மைத் தேர்வுகள் 2026 மார்ச் மாதம் நடைபெறும். டிஎன்பிஎஸ்சி இந்த ஆண்டு 7 அறிவிப்புகளை வெளியிட்டது. அதில் 6 தேர்வுகள் நடத்தப்பட்டுள்ள நிலையில், குரூப் 4 ஏ பணியிடங்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது. குரூப் 4 பணியிடங்களில் 3,935 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன. நேற்று கூடுதலாக 727 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 4,662 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இவர்களுக்கான தேர்வு முடிவு அக்டோபர் மாதம் வெளியிடப்படும். 2026 ஆம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி-யின் கால அட்டவணை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அது டிசம்பர் மாதத்திற்குள் வெளியிடப்படும்.

2024 ஆம் ஆண்டு 10,701 பணியிடங்கள் நிரப்பப்பட்டது. 2025 ஆகஸ்ட் மாதம் வரை 15,504 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ள நிலையில், மேலும் 9,725 பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 11,237 பேர் எழுதினர் :
தூத்துக்குடி செயின்ட் தாமஸ் பள்ளி, ஏபிசி கல்லூரி, பிஎம்சி பள்ளி ஆகிய தேர்வு மையங்களை ஆட்சியர் இளம்பகவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர்,
கோவில்பட்டி ஆகிய நான்கு வட்டங்களில் மொத்தம் 49 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. தூத்துக்குடி வட்டத்தில் 24 மையங்களில் 5904 தேர்வர்களும், கோவில்பட்டி வட்டத்தில் 15 மையங்களில் 3298 தேர்வர்களும், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் 3 மையங்களில் 547 தேர்வர்களும், திருச்செந்தூர் வட்டத்தில் 7 மையங்களில் 1578 தேர்வர்களும் ஆக மொத்தம் 49 மையங்களில் 11,237 தேர்வர்கள் தேர்வை எழுதினர்.
தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 14,305 பேரில் 3068 பேர் தேர்வு எழுதவில்லை.

OMR விளக்கம் :
OMR என்றால் ஆப்டிகல் மார்க் ரீடர் (Optical Mark Reader) அல்லது ஆப்டிகல் மார்க் ரெகக்னிஷன் (Optical Mark Recognition) என்பதாகும். தமிழில் இதை ஒளிவழிக் குறி வாசிப்பி அல்லது ஒளிக் குறி உணரி என்று அழைக்கலாம். இது தேர்வுத் தாள்கள் போன்ற காகித ஆவணங்களில், குமிழ்கள் அல்லது பெட்டிகளை நிரப்புவது போன்ற மனிதர்களால் உருவாக்கப்பட்ட மதிப்பெண்களை அங்கீகரிக்கும் தொழில்நுட்பமாகும்.
OMR எவ்வாறு செயல்படுகிறது?
OMR தொழில்நுட்பம், குமிழ்கள் அல்லது பெட்டிகளில் உள்ள இருண்ட பகுதிகளை அடையாளம் கண்டு, அவை தேர்ந்தெடுக்கப்பட்டதா என்பதைத் தீர்மானிக்கிறது.
இந்தத் தொழில்நுட்பம் தேர்வுத்தாள்களில் உள்ள பதில்களை தானாகவே படித்து, விடைத்தாள்களை மிக வேகமாக மதிப்பிட உதவுகிறது.
இது அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் பங்கேற்கும் தேர்வுகளில் தரவுகளைச் சேகரித்துச் செயலாக்கப் பயன்படுத்தப்படுகிறது.












