கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் ( Special Class) நடத்தும் தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. கோடை விடுப்பை மாணவர்கள் பாதுகாப்பாக கழிப்பதற்கான அறிவுறுத்தல்களையும் பள்ளி கல்வித்துறை ஏற்கனவே வழங்கி உள்ளது.


கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் ஜூன் 2 ம் தேதி திறக்கப்படும் இருக்கும் சூழலில் சில மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகள் அடுத்த ஆண்டிற்கான பொதுத்தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் சில பள்ளிகளில் இணைய வழியில் வகுப்புகளை நடத்துவதாகவும் கல்வித்துறைக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தொடர் வகுப்புகள் குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை தரும் என பெற்றோர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கோடை விடுமுறையில் தனியார் பள்ளியில் சிறப்பு வகுப்பில் நடத்தக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதில் அனைத்து விதமான தனியார் பள்ளிகளுக்கு ஜூன் 1ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்களில் எந்தப் பள்ளியும் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிகளின் முதல்வர்கள், செயலாளர்கள் மற்றும் தாளாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை மீறி வகுப்புகள் நடத்தி மாணவர்கள் பாதிக்கப்பட்டால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க தனியார் பள்ளிகள் இயக்குனருக்கு பரிந்துரை செய்யப்படும் என்று கூறப்பட்டது.
அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வாயிலாக தனியார் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை மூலம் இந்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.












