நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கிடையிலான ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில், கோவில்பட்டி S.S.D.M. கல்லூரி அணி முதலிடம்!
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கிடையிலான ஆண்களுக்கான ஹாக்கி போட்டி கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் 24-09-2026 மற்றும் 25-09-2026 ஆகிய இரு தினங்களில் நடைபெற்றது.
இறுதி போட்டியில், கோவில்பட்டி S.S.D.M. கல்லூரி அணியும், நாகலாபுரம் அரசு கலை கல்லூரி அணியும் மோதின. இதில் கோவில்பட்டி S.S.D.M. கல்லூரி அணி 3 – 2 என்ற கோல் கணக்கில் வென்று முதல் இடத்தையும், நாகலாபுரம் அரசு கலைக்கல்லூரி அணி இரண்டாம் இடத்தையும் வென்றன. மூன்றாம் மற்றும் நான்காம் இடத்திற்கான போட்டியில் கோவில்பட்டி அரசு கலைக்கல்லூரி அணியும், கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியும் மோதின. இதில் கோவில்பட்டி அரசு கலை கல்லூரி அணி 4 – 3 என்ற கோல் கணக்கில் வென்று மூன்றாம் இடத்தையும், கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணி நான்காம் இடத்தையும் பிடித்தது.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் தலைமை தாங்கி வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உடற் கல்வியியல் இயக்குநர் முனைவர்.ஆறுமுகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர் சிவஞானம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் செய்யது அலி ஆகியோர் விழாவில் கலந்துகொண்டனர். கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் வழிகாட்டுதலின் படி, இந்நிகழ்ச்சியை கே.ஆர். கல்வி நிறுவனங்களின் உடற்கல்வி இயக்குனர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.












