பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கும் காலை உணவை ஆசிரியர்கள் சாப்பிட்ட பின் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் : பள்ளிக் கல்வித்துறை உத்தரவிற்கு கடும் கண்டனத்தை கல்விச் செய்திகள் தெரிவிக்கிறது !

பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கும் காலை உணவை ஆசிரியர்கள் சாப்பிட்ட பின் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் :
பள்ளிக் கல்வித்துறை உத்தரவிற்கு கடும் கண்டனத்தை கல்விச் செய்திகள் தெரிவிக்கிறது !

திருவள்ளூரில் பள்ளியில் வழங்கிய காலை உணவை சாப்பிட்ட 40 மாணவர்கள் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிகழ்விற்கு பிறகு பள்ளிக் கல்வித்துறை இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், கொட்டையூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. செப்டம்பர் 24 அன்று காலை மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் கோதுமை ரவா கிச்சடி மற்றும் சாம்பார் வழங்கப்பட்டது.

மாணவர்கள் உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, உணவில் பல்லி ஒன்று இறந்து கிடப்பது கண்டறியப்பட்டது.

பல்லி கிடந்ததை அறிந்ததும் ஆசிரியர்கள் உடனடியாக மற்ற மாணவர்களுக்கு உணவு பரிமாறுவதை நிறுத்தினர்.எனினும், அதற்குள் உணவைச் சாப்பிட்ட சுமார் 40 மாணவர்களுக்கு பயம் மற்றும் உணவு நச்சுத்தன்மை (Food Poisoning) காரணமாக அடுத்தடுத்து வாந்தி, மயக்கம் ஏற்பட்டது

பாதிக்கப்பட்ட மாணவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது .

தற்போது அனைத்து மாணவர்களும் நலமுடனும், அபாய கட்டத்தைத் தாண்டியும் இருக்கிறார்கள். மேலும் சிகிச்சைக்குப் பின் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

காலை உணவை ஆசிரியர்கள் சாப்பிட்ட பின்னர் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்றால் ஆசிரியர்கள் என்ன கிள்ளுக்கீரையா ? பாடம் கற்றுக் கொடுக்கும் குரு என்பதனைத் தவிர ஆசிரியர்கள் என்ன பாவம் செய்தார்கள்.

உணவை தயார் செய்வதற்கு கூடுதலாக பணி ஆட்களை நியமனம் செய்து கவனமாக உணவை தயார் செய்வதை விட்டு விட்டு ஆசிரியர்கள் சாப்பிட்டு பார்க்க வேண்டும் என்றால் பள்ளியில் உள்ள எத்தனை ஆசிரியர்கள் சாப்பிட வேண்டும், தலைமை ஆசிரியர் சாப்பிட வேண்டுமா ? ஆசிரியர்கள் சாப்பிட்டு பார்த்த பின்னர் எவ்வளவு நேரம் கழித்து மாணவர்களுக்கு உணவை பரிமாற வேண்டும்,என்பதனையும் பள்ளிக் கல்வித்துறை தெரிவிக்க வேண்டும்.

1 ம் வகுப்பு வினாத்தாள்களை பாதுகாக்க முடியாத பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர்களுக்கு யாரை கேட்டு இந்த உத்தரவினை‌ பிறப்பித்தது.பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்.

ஏன் ஆசியர்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பதனால் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளதா ?

ஆசிரியர்கள் அனைவரும் தனது மாணவர்களை தனது குழந்தையாகத்தான் பார்க்கிறார்கள்.ஒரு தாய் தான் பெற்ற குழந்தைகளுக்கே தான் சமைத்த உணவை சாப்பிட்டு பார்த்த பின்னர் வழங்குவதில்லை.

ஆசிரியர்கள் என்ன பாவம் செய்தார்கள்? அவர்களும் ஒரு உயிர் தானே.அவர்களுக்கும் குழந்தைகள், குடும்பங்கள் இல்லையா?

காலை உணவை முதலில் எந்த ஆசிரியர் சாப்பிட வேண்டும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலில் யார் சாப்பிட வேண்டும் என்ற பட்டியலையும் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டால் நன்றாக இருக்கும்.இதற்கும் எமிஸ் மாதிரி ஒரு இணையதளத்தை அரசு உருவாக்க வேண்டும்.

மேலும் காலை உணவை ஆசிரியர்கள் டெஸ்டிங் பண்ணும் போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் ஆசிரியர்கள் காலை உணவினை சாப்பிட்டு பார்த்தார்கள் என்று உண்மையை கண்டறியும் சான்றினை கொடுக்க முன் வருவார்களா?

இந்த உத்தரவினை பிறப்பிக்கும பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அவர்களுக்கு இன்சூரன்ஸ் செய்வார்களா?

மேலும் ஒவ்வொரு பள்ளியின் முன்பும் ஒரு ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்த வேண்டும் என்பதனையும் பள்ளிக் கல்வித்துறை உறுதி செய்ய வேண்டும்.

இது போன்ற நடைமுறைக்கு ஒத்து போகாத, மனிதாபிமானமற்ற உத்தரவினை உடனே பள்ளிக் கல்வித்துறை வாபஸ் வாங்க வேண்டும் கல்விச் செய்திகள் கோரிக்கையாக வைக்கிறது.