தூத்துக்குடி கீதா ஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 6 ஆவது புத்தகத்திருவிழாவை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான போட்டிகள்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி, 6ஆவது புத்தகத்திருவிழா 2025 – ஐ சிறப்பிக்கும் விதமாக மாவட்ட அளவிலான போட்டிகள் கீதா ஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 21.08.2025 வியாழக்கிழமையன்று காலை 11.00 மணியளவில் கல்லூரி கலையரங்கில் தமிழ்த்தாய் வாழ்த்தோடு தொடங்கியது.

கல்லூரி முதல்வர் முனைவர். இளங்குமரன் தலைமையேற்று, புத்தகம் படிப்பதனால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
ஓட்டப்பிடாரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பேராசிரியர் முனைவர். வைடூரியம்மாள், வாசித்தல் பற்றியும் மாணவர்கள் தினமும் ஒரு பக்கமாவது கண்டிப்பாக படிக்க வேண்டும் என்றும் உரையாற்றினார்.

தூத்துக்குடி மாவட்ட புத்தகத்திருவிழா ஒருங்கிணைப்பாளர் அய்யனுராஜ், போட்டியின் விதிமுறைகள் பற்றி எடுத்துரைத்தார்.
‘விவாதமேடை’ போட்டிக்கு முனைவர். பேச்சிமுத்து, வரலாற்றுத்துறைத் தலைவர் நடுவராகவும், ‘இலக்கிய வினாடிவினா’ போட்டிக்கு மாலதி, கணிதவியல் துறைத் தலைவர் நடுவராகவும், ‘நூல் அறிமுகம்’ போட்டிக்கு மரிய ஆண்டனி மோனிகா ஆங்கிலத் துறைத் தலைவர் நடுவராகவும், இரண்டு நிமிட பேச்சுப் போட்டிக்கு முனைவர். ஜெயவசந்தி, தமிழ்த்துறைத் தலைவர் நடுவராகவும் செயல்பட்டனர்.

பேராசிரியர்களுக்கான நூல் மதிப்புரை போட்டிக்கு முனைவர். வைடூரியம்மாள், தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், மற்றும் அய்யனுராஜ், தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் ஆகியோர், நடுவராக செயல்பட்டனர்.
பல்வேறு கல்லூரிகளிலிருந்து மாணவ மாணவியர்களும் பேராசிரியர்களுமாக 72 பேர் இப்போட்டியில் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு புத்தகத்திருவிழா நிறைவு விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.

தேசீய கீதம் பாட விழா நிறைவு பெற்றது.
முதல்வரின் ஆலோசனையின்படி, அய்யனுராஜ், தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், காமராஜ் கல்லூரி, மற்றும் முனைவர். ஜெயவசந்தி, தமிழ்த்துறைத் தலைவர் ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தனர்.













