+2 பொதுத் தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் சாதனை
2024- 25 ஆம் கல்வி ஆண்டுக்கான தமிழக பள்ளிக் கல்வி வாரியத்தின் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளானது மே 8 ல் வெளியானது. மாநிலக் கல்வி வாரியத்தின்கீழ் 12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை 7 லட்சத்து 92 ஆயிரத்து 494 மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மார்ச் 3 -ஆம் தேதி முதல் 25 வரை தேர்வுகள் நடந்தது. தொடர்ந்து விடைத்தாள் திருத்தம் பணி ஏப்ரல் 4 -ஆம் தேதி தொடங்கி 17 -ஆம் தேதி வரை நடைபெற்றது. விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்த பிறகு, மாணவர்களின் மதிப்பெண்களை இணையத்தில் பதிவேற்றும் பணிகள் நடைபெற்றன.
தேர்வு முடிவுகள்
12 -ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகளை மே 8 -ஆம் தேதி காலை 9 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
மாநில தேர்ச்சி விபரம்
12 -ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 95.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகமாகியுள்ளன. மாணவர்கள் 93.16 சதவிகிதமும் மாணவிகள் 96.70 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் மாநில அளவில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் பொதுத்தேர்வில் சாதனை படைத்துள்ளனர்.
முதலிடம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கேவரோடை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மோகன்தாஸ், சரளா
தம்பதியினர். இவர்களுக்கு அரவிந்த், ஆனந்த் இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் அரவிந்த் இளநிலை பட்டப்படிப்பு முடித்துள்ளார். இளைய மகன் ஆனந்த் பார்வை குறைபாடு உள்ளவர் ஆவார்.
இவர் சென்னை பூந்தமல்லியில் உள்ள பார்வை குறைபாடு உடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று வெளியான 12 வகுப்பு பொதுத்தேர்வில் தமிழக அளவில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார்.
கணினி வழியில் தேர்வு எழுதிய இவர் 486 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மேலும் பார்வை குறைபாடு உடைய மாணவர்களுக்கு அரசு மடிக்கணினி வழங்க முன்வர வேண்டும் எனவும், ஆங்கில ஆசிரியர் அல்லது அப்ளிகேஷன் டெவலப்பராக விருப்பம் என்றும் தெரிவித்துள்ளார்.
இரண்டு கைகளை இழந்த மாணவன்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஜீனூர் பகுதியை சேர்ந்தவர் மாணவன் கீர்த்தி வர்மா. இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
சிறுவயதிலேயே இரண்டு கைகளையும் இழந்த மாணவன் கீர்த்தி வர்மா படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தார்.
இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவன் கீர்த்தி வர்மா 437 மதிப்பெண் பெற்று தான் படித்த பள்ளியிலேயே முதல் மாணவனாக வந்தார். இவரை தமிழக முதல்வர் ஸ்டாலின் பாராட்டினர்.
இந்நிலையில் இந்த வருடம் 12ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய கீர்த்தி வர்மா 471 மதிப்பெண் பெற்றுள்ளார். ஆசிரியர்களின் துணையோடு தேர்வு எழுதிய மாணவன் 471 மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளார். இவரை பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
இது குறித்து பேசிய மாணவன் கீர்த்தி வர்மா அடுத்ததாக பொறியியல் படிக்க ஆசைப்படுவதாகவும், அதற்கு அரசு தனக்கு உதவி செய்ய வேண்டும் எனவும் மேலும் இரண்டு கைகளை இழந்த தனக்கு, கைகளை பொருத்த தமிழக முதல்வர் தனக்கு உதவி செய்ய வேண்டும் எனவும், தாயின் அரவணைப்பில் வாழும் தனக்கு அரசு முன்வந்து உதவி செய்ய வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து இந்த கோரிக்கை முதலமைச்சரின் ஸ்டாலின் கவனத்துக்கு சென்றது. இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் மா சுப்பிரமணயன் உங்களுக்கான மருத்துவ சிகிச்சைகளுக்கான ஏற்பாடுகளை கவனிப்பார், கவலை வேண்டாம் என கூறியுள்ளார்.
கோரிக்கை
மாற்றுத்திறனாளிகள் மாணவர்களுக்கு இதேபோல் தமிழக அரசு, அறக்கட்டளை மற்றும் பெரிய பெரிய முதலாளிகள் உதவிக்கரம் நீட்டினால் மாற்றுத்திறனாளிகள் விண்ணை எட்டி சாதனை படைப்பார்கள்.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவ கல்விச் செய்திகள் கோரிக்கை வைக்கிறது.












