அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகள் தினப் பரிசு: ரூ.9.27 கோடியில் கேக் வழங்க தமிழக அரசு முடிவு !
61 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கேக் வழங்கும் திட்டத்திற்கு விரைவில் டெண்டர் கோரப்படவுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில், நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளான நவம்பர் 14 குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்க தமிழக அரசு புதிய திட்டத்தை வகுத்துள்ளது.
இதற்காக மொத்தம் 9 கோடியே 27 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரும் நவம்பர் 14-ஆம் நாள் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட உள்ளதை ஒட்டி, மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
முதலமைச்சர் தலைமையிலான அரசு இந்த விவகாரத்தில் தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதோடு, மாணவர்களுக்கு சுவையான கேக்குகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை துரிதப்படுத்தியுள்ளது.

கேக் வகைகள்:
ஒரே சுவையாக இல்லாமல் மிக்ஸ்டு ப்ரூட், கிளாசிக் வெனிலா, ரிச் சாக்லேட் மற்றும் பட்டா்/மில்க் ஆகிய 4 சுவைகளில் கேக்குகள் வழங்கப்பட வேண்டும். கேக்குகள் தரமானதாக, மென்மையாக, பஞ்சு போல இருக்க வேண்டும். பூஞ்சை, கெட்டுப்போன துா்நாற்றம், செயற்கை ரசாயன சுவை இருக்கக்கூடாது. டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் தடை செய்யப்பட்ட நிறமூட்டிகள் சோ்க்கப்பட்டிருக்கக் கூடாது.
அதேபோல், பள்ளிகளில் நவ. 14-ஆம் தேதியன்று கேக்குகள் விநியோகிக்கும் போது, குறைந்தபட்சம் மேலும் 30 நாள்கள் கெடாமல் இருக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஈரப்பதம் புகாத தரமான உறைகளில் கேக் ‘பேக்’ செய்யப்பட்டிருக்க வேண்டும். உறைக்கு மேல் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, உணவுப் பாதுகாப்புத் துறை முத்திரை மற்றும் தமிழக அரசின் லோகோ கட்டாயம் இடம்பெற வேண்டும்.

இந்த ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்கும் நிறுவனங்கள் என்ஏபிஎல் அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் தரச்சான்றிதழ்களைப் பெற்று சமா்ப்பிக்க வேண்டும். மேலும், ஆய்வுக்குழுவிடம் ஒவ்வொரு சுவையிலும் ‘சாம்பிள்’ கேக்குகளை வழங்கி ஒப்புதல் பெறுவது கட்டாயம்.
ஒப்பந்தம் பெறும் நிறுவனம், போக்குவரத்துச் செலவுகளை ஏற்று டிஎன்சிசி கிடங்குகளுக்கு நேரடியாக கேக்குகளை பாதுகாப்பாக விநியோகிக்க வேண்டும். மேலும், இதுதொடா்பான கூடுதல் விவரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.












