தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் லிவோரா 2026 – இயற்கை மற்றும் வனவிலங்கு கண்காட்சி தொடங்கியது: கல்லூரிச் செயலர் ஏ.பி.சி.வீ.சொக்கலிங்கம் துவக்கி வைத்தார்!

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் லிவோரா 2026 – இயற்கை மற்றும் வனவிலங்கு கண்காட்சி தொடங்கியது:
கல்லூரிச் செயலர் ஏ.பி.சி.வீ.சொக்கலிங்கம் துவக்கி வைத்தார்!

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி தனது 75 வது ஆண்டு பவள விழாவை கொண்டாடி வருகிறது.அதனை முன்னிட்டு நடப்பாண்டு முழுவதும் பல்வேறு போட்டிகள்,கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.அதன் ஒரு பகுதியாக முதல் முறையாக கல்லூரியின் விலங்கியல் துறை சார்பாக “LIVORA 2026 – இயற்கை மற்றும் வனவிலங்குகளை கொண்டாடி அறியும் கண்காட்சி” அக்டோபர் 7 ம் தேதி முதல் 10 ம் தேதி வரை 4 நாட்கள் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.

அதன் துவக்க விழா இன்று காலை 10.00 மணிக்கு நடைபெற்றது.கண்காட்சியை கல்லூரிச் செயலர் ஏ.பி.சி.வீ.சொக்கலிங்கம் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரி செயலர் சுப்புலட்சுமி முன்னிலை வகித்தார்.

கல்லூரி முதல்வர் முனைவர்.வீரபாகு மற்றும் விலங்கியல் துறைத் தலைவர் ராதிகா வழிகாட்டுதலின் படி நடைபெற்ற கண்காட்சி பள்ளி , கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே அறிவியல் விழிப்புணர்வு மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கமாக நடைபெறுகிறது.

விலங்கியல் முதுநிலை மற்றும் ஆராய்ச்சித்துறை சார்பில் நடைபெறும் இக் கண்காட்சியில் அழகிய அயல் நாட்டு பறவைகள், விலங்கியல் அருங்காட்சியகம், கடல் மீன் காட்சியகங்கள், அறிவியல் மாதிரிகள், ஒளிரும் உயிர்களின் உலகம், மெல்டிங் மேன்,உயிருள்ள விலங்குகள் சுற்றுச்சூழல் மாதிரிகள் மற்றும் பல்வேறு கல்விசார் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

மனிதனின் உயிர்வாழ்வில் காடுகளின் முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்பு குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்படும் வனச் சூழல் தொடர்பான காட்சியின் மூலம் பல்லுயிர் வளம், வனவிலங்குகளின் வாழ்விடங்கள், சுற்றுச்சூழல் சமநிலை மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வாய்ப்பை இதன் மூலம் பெறுவார்கள்.

மேலும் இக்கண்காட்சி இளம் தலைமுறையினர் இயற்கை மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பொறுப்புணர்வுடன் செயல்படுவதற்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்த கண்காட்சி புத்தக படிப்பினையும் தாண்டி இயற்கையின் பல்லுயிர் வளத்தை மாணவர்கள் நேரடியாக அறிந்து கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது.

 

கண்காட்சியை மாணவர்கள் பார்வையிடும் நேரம் :

பதிவு செய்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை கண்காட்சியை பார்வையிடலாம்.

 

பொதுமக்கள் அனுமதி :

பொதுமக்கள் பார்வையிடுவதற்காக மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை அனுமதி உண்டு.

 

நாய்களின் அணிவகுப்பு :

இன்றைய கண்காட்சியில் மாலை 5.30 மணிக்கு வீட்டு வளர்ப்பு விலங்கான நாய்களின் அணிவகுப்பு நடைபெற்றது.

 

கண்காட்சிக்கு செல்லும் வழி :

கண்காட்சிக்கு வருகை தரும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டிப்பாக சிதம்பர நகரில் உள்ள வாசல் வழியாக மட்டுமே உள்ளே வர அனுமதிக்கப்படுவார்கள்.

“அனுமதி இலவசம்”

 

சனிக்கிழமை முழு நேரம் அனைவரும் அனுமதி :

கண்காட்சியின் கடைசி நாளான 10 ம் தேதி சனிக்கிழமை முழு நேரம் அனைவரும் பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர்.