தூத்துக்குடி, வ.உ.சிதம்பரம் கல்லூரியில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் :
மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தொடங்கி வைத்தார்.

முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்றது.விழாவை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தொடங்கி வைத்தார். அப்போது ஆட்சியர் பேசியதாவது :

“மாவட்ட அளவிலான இப்போட்டிகள் அக்டோபர் 3-ம் தேதி வரை ஒரு மாதம் நடைபெறுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் என 5 பிரிவுகளில், 45 வகையான போட்டிகள் நடைபெறுகின்றன. 47 ஆயிரம் பேர் கலந்து கொள்கின்றனர்” என்றார் ஆட்சியர்.

மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயபாரதிராஜ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி, வ.உ.சி கல்லூரி முதல்வர் முனைவர்.வீரபாகு, வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஆனந்த் மற்றும் உடற்கல்வி பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.

இப்போட்டிகள் மாவட்டத்தில் உள்ள 13 இடங்களில் நடைபெறுகின்றன. இப்போட்டிகளில் பங்கேற்க மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் என சுமார் 46,800 பேர் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.













