தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் பள்ளியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி !
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சார்பில் தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளியில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை உதவி ஆய்வாளர் ஆரோக்கிய ஜென்ஸி கலந்து கொண்டு மாணவிகள், பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு அவர்களின் பாதுகாப்பு, சட்ட உரிமைகள், சைபர் குற்றங்கள் மற்றும் இணையவழி மோசடிகளில் இருந்து எச்சரிக்கையாக இருப்பதன் அவசியம் குறித்து விளக்கினார்.

மேலும், பாலியல் தொல்லைகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான தகவல்களை உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டியதன் முக்கியத்துவமும் எடுத்துரைக்கப்பட்டது.
அத்துடன், அவசர காலங்களில் உதவி பெறுவதற்கான 100 (காவல்துறை அவசர உதவி எண்), 181 (மகளிர் உதவி எண்), 1098 (குழந்தைகள் உதவி எண்) மற்றும் 1930 (சைபர் குற்ற புகார் உதவி எண்) ஆகிய சேவை எண்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் பெண் காவலர்கள் செல்வகுமாரி, சந்தனமாரி, காவலர் அசாருதீன்,முதுகலை ஆசிரியை மரகதவள்ளி கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி செய்திருந்தார்.












