8 – ம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: பெரியார் பிறந்த நாளில் தொடங்க முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவு !

8 – ம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்:
பெரியார் பிறந்த நாளில் தொடங்க முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவு !

முதல்​வரின் காலை உணவுத் திட்​டம் 8 – ம் வகுப்பு வரை விரி​வாக்​கம் செய்​யப்​படு​வ​தாக முதல்​வர் விஜய் அறி​வித்​துள்​ளார்.

பெரி​யாரின் பிறந்த நாளான செப்​.17-ம் தேதி இத்​திட்​டத்தை தொடங்க நடவடிக்கை எடுக்​கு​மாறு சமூக நலத்துறை அதி​காரி​களுக்கு உத்​தர​விட்​டுள்​ளார்.

கடந்த திமுக ஆட்​சி​யில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை அரசு தொடக்​கப் பள்​ளி​களில் முதல்​வரின் காலை உணவுத் திட்​டம் கொண்டு வரப்​பட்​டது. கடந்த 2022 செப்​.15-ம் தேதி அண்ணா பிறந்த நாளில் இத்​திட்​டத்தை அப்​போதைய முதல்​வர் மு.க.ஸ்டா​லின் தொடங்​கி​வைத்​தார்.

பின்​னர், அரசு உதவி​பெறும் தொடக்​கப் பள்​ளி​களுக்​கும் இத்​திட்​டம் விரிவுபடுத்​தப்​பட்​டது. விரி​வாக்க திட்​டத்தை மு.க.ஸ்டா​லின் 2023 ஆக.25-ம் தேதி தொடங்​கி​வைத்​தார். தற்​போது 17.55 லட்​சம் மாணவ, மாணவி​கள் இத் திட்​டத்​தால் பயன்​பெற்று வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், தமிழகத்​தில் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்டு தவெக அரசு பொறுப்​பேற்​றுள்ள நிலை​யில், முதல்​வரின் காலை உணவுத் திட்​டத்தை 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை விரி​வாக்​கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்​பான ஆலோ​சனைக் கூட்​டம் சென்னை தலை​மைச் செயல​கத்​தில் முதல்​வர் விஜய் தலை​மை​யில் நேற்று நடை​பெற்​றது. இக்​கூட்​டத்​தில், முதல்​வரின் காலை உணவுத் திட்​டத்தை 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவி​களுக்கு விரி​வாக்​கம் செய்ய ஏது​வாக, பெரி​யார் பிறந்த நாளான செப்​.17-ம் தேதி தொடங்​கு​வதற்கு நடவடிக்கை மேற்​கொள்​ளு​மாறு சமூக நலத் துறை அதி​காரி​களுக்கு முதல்​வர் விஜய் அறி​வுறுத்​தி​னார்.

இந்த கூட்​டத்​தில் சமூக நலம், மகளிர் உரிமைத் துறை அமைச்​சர் ஜெகதீஸ்​வரி, தலை​மைச் செயலர் சாய்​கு​மார் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர்.

முதல்​வரின் காலை உணவுத் திட்ட விரி​வாக்​கம் குறித்​து, கூட்​டத்​தில் பங்​கேற்ற உயர் அதி​காரி​களிடம் கேட்​ட​போது, ‘‘முதலில் அரசு நடுநிலைப் பள்​ளி​களில் மட்​டும் இத்​திட்​டத்தை நடை​முறைப்​படுத்​து​வதா அல்​லது அரசு மற்​றும் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்​ளி​களி​லும் சேர்த்தே அமல்​படுத்​து​வதா என்​பது பின்​னர் அறிவிக்​கப்​படும். அப்​போது​தான் எத்​தனை மாணவ, மாணவி​கள்​ பயன்​பெறு​வார்​கள்​ என்​ற விவரம்​ தெரிய​வரும்​’’ என்​று தெரி​வித்​தனர்​.