2026 மற்றும் 2027 கல்வியாண்டில் 1 முதல் 3 ம் வகுப்பு வரை பாடத்திட்டம் மாற்றம்:
ஆசிரியர்களுக்கு 3 நாட்கள் புத்தாக்க பயிற்சி தொடக்கம்!


2026 மற்றும் 2027 ம் கல்வியாண்டில் 1 ம் வகுப்பு முதல் 3 ம் வகுப்பு வரை பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும் 4 ம் தேதி வியாழக்கிழமை கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறக்க இருக்கும் சூழலில் 1 முதல் 3 ம் வகுப்பு வரை கையாளும் ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டத்திற்கான புத்தாக்க பயிற்சி இன்று மாநிலம் முழுவதும் தொடங்கி 3 நாட்கள் ஜூன் 3 புதன்கிழமை வரை நடைபெற இருக்கிறது.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் நடத்தும் இந்த பயிற்சியை சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்.
அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடியில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் ( DIET) வானரமுட்டி ஒருங்கிணைப்புடன் தூத்துக்குடி நகர்ப்புறம் வட்டார வளமையம் ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் ஆசிரியர்கள் என மொத்தம் 18 கருத்தாளர்கள் இந்த பயிற்சியை 53 பள்ளிகளைச் சார்ந்த 142 ஆசிரியர்களுக்கு 3 நாட்கள் நடத்துகின்றனர்.

தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெறும் இந்த பயிற்சியின் முதல் நாளான இன்று ( ஜூன் 01 ) தமிழ் பாடத்திற்கான பயிற்சி நடைபெறுகிறது.
நாளை ஜூன் 02 செவ்வாய்க்கிழமை ஆங்கிலம் மற்றும் கணிதம்,நாளை மறுநாள் ஜூன் 03 புதன்கிழமை சூழ்நிலையியல், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்திற்கான பயிற்சி நடைபெற இருக்கிறது.

தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும் இப்பயிற்ச்சிக்கான ஏற்பாடுகளை வானரமுட்டி DIET முதல்வர் முனைவர்.அன்றோ பூபாலராயன், பேராசிரியர் தனலட்சுமி மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் செய்துள்ளனர்.














