நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று 5,500 மையங்களில் நடைபெறுகிறது:
தூத்துக்குடி மாவட்டத்தில் 5 மையங்களில் 1968 பேர் தேர்வு எழுதுகின்றனர் :
இளநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வு நாடு முழுவதும் சுமார் 5,500 மையங்களில் இன்று நடைபெறுகிறது.
மருத்துவப் படிப்புகளில் சுமார் 2 லட்சம் இடங்கள் உள்ள நிலையில், 22.80 லட்சம் மாணவ, மாணவிகள், தேர்வு எழுதுகின்றனர். நீட் தேர்வு முடிவுகளை அடுத்த மாதம் வெளியிட தேசியத் தேர்வுகள் முகமை திட்டமிட்டுள்ளது.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள், ராணுவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET – ‘நீட்’) தகுதி பெறுபவர்களைக் கொண்டு நிரப்பப்படுகின்றன.

இந்த தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்துகிறது. அதன்படி, 2026-27-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருச்சி, மதுரை, கோவை என 30 நகரங்கள் உட்பட 552 நகரங்கள் மற்றும் துபாய், அபுதாபி, தோகா, மஸ்கட், ரியாத்,சிங்கப்பூர் என வெளிநாடுகளில் 14 இடங்களில் தேர்வு நடைபெறும். அந்த வகையில், சுமார் 5,500 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.
சுமார் 2 லட்சம் இடங்கள் உள்ள நிலையில், 9.47 லட்சம் மாணவர்கள், 13.33 லட்சம் மாணவிகள் என மொத்தம் 22.80 லட்சம் பேர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் தேர்வு நடைபெறும். இயற்பியல், வேதியியல், உயிரியல் (தாவரவியல், விலங்கியல்) பாடங்களில் இருந்து தலா 50 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். அதில் 180 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.

மொத்தம் 720 மதிப்பெண்கள்:
ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் என மொத்தம் 720 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. ஒரு தவறான பதிலுக்கு ஒரு மதிப்பெண் (நெகட்டிவ்) குறைக்கப்படும். நீட் தேர்வு முடிவுகளை அடுத்த மாதம் வெளியிட என்டிஏ திட்டமிட்டுள்ளது.
ஆள்மாறாட்டத்தை தடுக்க.. கடந்த 2024-ம் ஆண்டு வட மாநிலங்களில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சிலர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு, உண்மையான தேர்வர்களுக்கு பதிலாக நீட் தேர்வு எழுதியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக பிஹார், ராஜஸ்தான், ஜார்க்கண்டில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், ஆள்மாறாட்டத்தை தடுக்கும் விதமாக, ‘நீட் தேர்வு நடைபெறும் இன்று மே 3-ம் தேதி மற்றும் நேற்று 2-ம் தேதி ஆகிய 2 நாட்களும் எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டாம்.அத்தியாவசியக் காரணங்கள் இருந்தால் மட்டும் விலக்கு அளிக்கலாம் என்று நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாகங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் கடந்த வாரம் சுற்றறிக்கை அனுப்பியது. அதன்படி, மருத்துவ மாணவர்களுக்கு நேற்று விடுமுறை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்வு கட்டுப்பாடுகள்:
தேர்வர்கள் காலை 11 மணி முதல் மதியம் 1.30 மணி வரை தேர்வு மையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். 1.30 மணிக்குப் பிறகு வந்தால் அனுமதி இல்லை என்று தேசியத் தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 5 மையங்களில் 1968 பேர் தேர்வு எழுதுகின்றனர்:
தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் 480 பேர், கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 480 பேர், தூத்துக்குடி புனித லசால் மேல்நிலைப்பள்ளியில் 240 பேர், தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 288 பேர், தூத்துக்குடி தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 480 பேர் என 5 மையங்களில் மொத்தம் 1,968 மாணவ, மாணவியர் தேர்வு எழுத உள்ளனர்












