10 ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது : தூத்துக்குடி மாவட்டத்தில் 21,751 மாணவ – மாணவிகள் தேர்வு எழுதினார்கள் : மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி தேர்வு மையத்தை ஆய்வு செய்தார்

10 ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது :
தூத்துக்குடி மாவட்டத்தில் 21,751 மாணவ – மாணவிகள் தேர்வு எழுதினார்கள் :
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி தேர்வு மையத்தை ஆய்வு செய்தார்

தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் 10 ம் வகுப்பு பொதுத் தோ்வு மாா்ச் 11 இன்று தொடங்கி ஏப்.6 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தோ்வை பள்ளி மாணவா்கள் 8,82,806 போ், தனித் தோ்வா்கள் 25,801 போ், சிறைவாசிகள் 395 என மொத்தம் 9,09,002 போ் எழுதுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன .

மேலும் 10 ம் வகுப்பு பொதுத் தோ்வெழுதும் 12,292 மாற்றுத் திறனாளி தோ்வா்களுக்கு சொல்வதை எழுதுபவா்களை (ஸ்கிரைப்) நியமித்துள்ளது. தோ்வுப் பணியில் 45,000-க்கும் மேற்பட்ட ஆசிரியா்களும், தோ்வு முறைகேடுகளைத் தடுக்க சுமாா் 4,800-க்கும் மேற்பட்ட பறக்கும் படையினரும் ஈடுபட்டுள்ளனா்.

10 ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் தூத்துக்குடி ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி பார்வையிட்டார்

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைக்கப்பட்ட 109 தேர்வு மையங்களில் 11,015 மாணவர்களும், 11,201 மாணவிகளும் உட்பட மொத்தம் 22,216 தேர்வர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை இன்று எழுதியுள்ளனர். தனித்தேர்வர்களாக 390 மாணவ – மாணவியர்கள் இத்தேர்வினை எழுதி உள்ளனர்.

இதில் இன்றைய முதல் நாள் தேர்வான மொழிப் பாடமான தமிழ் தேர்வில் 10,668 மாணவர்களும், 11,083 மாணவிகளும் என மொத்தம் 21,751 தேர்வர்கள் தேர்வினை எழுதினர் .இதில் 343 மாணவர்களும்,118 மாணவிகளும் என மொத்தம் 461 தேர்வர்கள் இன்று தேர்வினை எழுதவில்லை.மேலும் 4 மாணவர்களுக்கு இன்றைய தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இது சதவீத அடிப்படையில் 97.81% ஆகும்.இதில் மாணவர்கள் 96.78 சதவீதமும் மாணவிகள் 98.84 சதவீதமும் என மொத்தம் 97.81 சதவீதம் ஆகும்.

இன்று நடைபெற்ற அனைத்து தேர்வு மையங்களிலும் மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் இ.ஆ.ப.அறிவுறுத்தலின் படி காற்றோட்டமான தேர்வு அறைகள்,தூய்மையான குடிநீர் வசதி, தூய்மையான கழிப்பறை வசதி போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக தரைத்தளத்தில் உள்ள தேர்வறைகளில் தேர்வு எழுதவும், சொல்வதை எழுதுபவர் வசதியும் ஏற்படுத்தப்பட்டிருந்தது .பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களுக்கு உரிய போக்குவரத்து வசதி, காவலர் பாதுகாப்பு வசதி, தடையில்லா மின்சாரம் ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு தேர்வுகள் நல்ல முறையில் நடைபெற்றது.

இன்று தூத்துக்குடி ஹோலி கிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவிகளின் தேர்வு மையத்தை தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி ஆய்வு செய்து மாணவிகள் தேர்வு எழுதியதை பார்வையிட்டார்.

மேலும் இன்று தூத்துக்குடி விக்டோரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் நடைபெற்ற 10 ம் வகுப்பு தமிழ் பாட பொதுத்தேர்வில் மொத்தம் 419 மாணவிகளில் 417 மாணவிகள் தமிழ் பாடத் தேர்வினை எழுதினார்கள். இதில் 2 மாணவிகள் இன்று தேர்வினை எழுத வரவில்லை.