பள்ளி அரையாண்டு விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு கல்லூரி களப்பயணம் நிகழ்ச்சி :
பள்ளிக் கல்வித்துறை மற்றும் கல்வி அமைச்சர் உத்தரவினை காற்றில் பறக்க விட்ட தூத்துக்குடி கல்வி நிர்வாகம்
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு கடந்த 23 டிசம்பர் அன்று முடிவடைந்த நிலையில் 24 டிசம்பர் முதல் வரும் ஜனவரி 4 – 2026 வரை 12 நாட்கள் அரையாண்டு விடுமுறையாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுமுறையை கொண்டாடுவதற்காக தாங்கள் விருப்பப்பட்ட சுற்றுலா தளங்கள் மற்றும் விருந்தினர் இல்லங்களுக்கு சென்றுள்ளனர் மேலும் சிலர் தங்கள் வீட்டு திருமண வைபோகம் மற்றும் மருத்துவ சிகிச்சை போன்றவற்றை மேற்கொண்டு வருவதற்காக இந்த அரையாண்டு விடுமுறையை பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் பள்ளி விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்கக் கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி இருந்தது.அவ்வாறு அரையாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பில் எடுக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தி இருந்தது.
இந்நிலையில் பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தபோதும்
அரையாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது. விடுமுறை என்பது மாணவர்களின் புத்துணர்ச்சிக்காக அளிக்கப்படுகிறது. எனவே அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுத்தி விடக்கூடாது. குறிப்பாக தனியார் பள்ளிகள் அதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். என்று அறிவித்திருந்தார்.
ஆனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கல்வித்துறை இந்த அரையாண்டு விடுமுறை நாட்களில் கல்லூரி களப்பயணம் நிகழ்ச்சிகளை மாணவர்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்கிழ்ச்சியானது நாளை டிசம்பர் 29 மற்றும் 30 ( திங்கள், செவ்வாய் ) தேதிகளில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்களை அழைத்துக்கொண்டு கல்லூரி களப்பயணமாக வெளியூர்களுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனால் அரையாண்டு தேர்வு விடுமுறையை மகிழ்ச்சியாக கழிக்க முடியாமல் மாணவர்களும், ஆசிரியர்களும், மேலும் பெற்றோர்களும் மிகுந்த வேதனையில் உள்ளனர்.
ஏற்கனவே முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் துணைத் தலைவர் மற்றும் மாவட்ட செயலாளர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியை கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தனர். ஆனால் இதனை சிறிதும் கண்டுக்காத தூத்துக்குடி மாவட்ட கல்வி நிர்வாகம் இந்த கல்லூரி களப்பயணம் நிகழ்ச்சியை மேற்கொள்ள மும்முரமாக ஏற்பாடு செய்துள்ளனர்.
இவ்வாறு பள்ளி கல்வித்துறையும், கல்வி அமைச்சரும் பள்ளி விடுமுறை நாட்களில் எந்த நிகழ்ச்சியிலும் மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது என்று அறிவுறுத்துள்ள சூழ்நிலையில் தூத்துக்குடி மாவட்ட கல்வி நிர்வாகம் இந்த ஏற்பாடுகளை செய்திருப்பதை மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும். இது பள்ளி கல்வித்துறைக்கு தெரியுமா? அல்லது தூத்துக்குடி மாவட்ட கல்வி நிர்வாகமே இதனை ஏற்பாடு செய்துள்ளதா என்பது தெரியவில்லை.
மேலும் கல்வி அமைச்சர் அறிவுத்திருந்த செயலை இது மீறுவதாக உள்ளது.
எனவே தூத்துக்குடி மாவட்ட கல்வி நிர்வாகம் அரையாண்டு தேர்வு விடுமுறையில் நடத்த இருக்கும் இந்த கல்லூரி களப்பயணம் நிகழ்ச்சியை ரத்து செய்து பள்ளி வேளை நாட்களில் இந்த நிகழ்ச்சியை வைத்து மாணவர்களை அரையாண்டு தேர்வு விடுமுறையை மகிழ்ச்சியாக கழித்து வரும் புத்தாண்டு 2026 5 ம் தேதி மாணவர்கள் அனைவரும் புத்துணர்ச்சியாக பள்ளிக்கு வந்து தங்களது கல்வியை கற்க உதவுமாறு மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பாக வேண்டுகோள் வைக்கப்படுகிறது.
குறிப்பு :
தமிழகத்தில் ‘நான் முதல்வன்’ திட்டம் போன்ற அரசுத் திட்டங்களின் கீழ், அரசுப் பள்ளி +2 மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கல்லூரிகளைப் பார்வையிடவும் களப்பயணங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
இந்தக் களப்பயணங்கள் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும், தனிப்பட்ட வளர்ச்சிக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைகின்றன.
ஆனால் இதனை பள்ளி விடுமுறை நாட்களில் மேற்கொள்வது மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு வேதனை அளிக்கிறது.












