தமிழகத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு நாளை ( 12-10 – 2025 )
தமிழகம் முழுவதும் 809 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது :
தூத்துக்குடி மாவட்டத்தில் 14 தேர்வு மையங்கள்
தமிழகத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு திட்டமிட்டபடி நாளை நடைபெறும்.
தமிழகத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை நடத்துவது என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்து அதற்கான அறிவிப்பை கடந்த ஜுலை மாதம் வெளியிட்டது.
எனினும், இந்த தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்ற தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர். அத்தேர்வுக்கான பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. இதனால், அத்தேர்வை தாங்கள் எதிர்கொள்வதற்கு தயாராக கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது என கூறி தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
மேலும் தேர்வை சில வாரங்கள் ஒத்திவைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது. இதுகுறித்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டும் 12-ந்தேதி நடைபெறவுள்ள போட்டித் தேர்வை ஒத்திவைப்பது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் பரிசீலிக்க வேண்டும் என்று ஆணையிட்டது.

மேலும் புதிய பாடத்தின் அடிப்படையில் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல, இந்த தேர்வு உத்தேசமாக நவம்பர் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் தங்களால் தேர்வுக்கு தயாராக முடியவில்லை என்றும் தேர்வினை தள்ளி வைக்கவேண்டும் என்றும் விண்ணப்பதாரர்கள் பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு நேற்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்வுக்கு விண்ணப்பத்திருந்த 2 லட்சத்து 36 ஆயிரத்திற்கு மேற்பட்டருக்கு நுழைவுச்சீட்டு தயாரிக்கப்பட்டதாகவும், ஓஎம்ஆர் விடைத்தாள்கள் தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
அரசு தரப்பு வாதத்தை ஏற்ற நீதிமன்றம் முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது.

இதன்படி, தமிழகத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்க உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 809 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்வுக்கு வரும் ஆசிரியர்கள் அதற்காக தங்களை தயார்படுத்தி கொண்டு வரும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 14 மையங்களில் தேர்வு நடைபெற இருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் முதுகலை ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வை 4 ஆயிரதது 107 பேர் எழுதுகின்றனர்.
இவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு ஏற்கனவே வழங்கப்பட்டு உள்ளது.
இவர்கள் தேர்வு எழுதுவதற்கு வசதியாக மாவட்டம் முழுவதும் 14 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தேர்வு மையங்களில் போதுமான மின்சார வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்துக்கு செல்வதற்கு வசதியாக 5 வழித்தடங்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
மேலும் அனைத்து தேர்வு மையங்களிலும் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இந்த தேர்வை எழுதும் தேர்வர்கள் காலை 8.30 மணிக்குள் தேர்வு மையங்களுக்கு வர வேண்டும்.
மேலும் தேர்வு எழுதுவதற்கு கருப்பு பந்துமை பேனா 2, தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு, அடையாள அட்டை ஆகியவை தவிர எந்தவித எலக்ட்ரானிக் பொருட்களும் அனுமதிக்கப்படாது என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.












